×

பட்டங்கள் பல வென்ற நவீன அறிவியலின் வழிகாட்டி

சந்திரசேகர வெங்கடராமன் (1888 நவ. 7 – 1970 நவ. 21)

சந்திரசேகர வெங்கட்ராமன் என்று சொல்வதை விட சர் சி.வி.ராமன் என்று சொன்னால்தான் நமக்கெல்லாம் சட்டென்று தெரியும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதராஸ் மாகாணமாக இருந்த தற்போது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் தமிழ் பிராமண பெற்றோர்களான சந்திரசேகர ராமநாதன் ஐயர் மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். இவர் ஒளிச்சிதறல் துறையில் தனது பணிக்காக அறியப்பட்ட ஒரு இந்திய இயற்பியலாளர் ஆவார். இவர் 1921 செப்டம்பரில் எஸ்.எஸ். நர்குண்டா கப்பலில் இங்கிலாந்தில் இருந்து ஒரு பயணத்தின்போது , ​​அவர் மத்தியதரைக் கடலின் நீல நிறத்தைப் பற்றி சிந்தித்தார். கடலின் நிறம் ஏன் நீலமாக உள்ளது? கப்பலில் பயணித்த இந்திய விஞ்ஞானி வெங்கடராமனுக்கு எழுந்த கேள்வி இது. இதுகுறித்து அவர் இடைவிடாத ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டார். பலவிதமான திரவங்கள் வழியாக ஒளியைப் பாய்ச்சி மூன்றாண்டுகள் அவர் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில், அவர் வெளியிட்டதே ‘ராமன் விளைவு’என்ற கண்டுபிடிப்பு.

‘கடல் நீரில் சூரிய ஒளிக்கதிர்கள் புகும்போது, நீரிலுள்ள மூலக்கூறுகளின் கூட்டணுக்களால் ஒளிச்சிதறல் ஏற்பட்டு, வெவ்வேறு அலைநீளமுடைய புதிய நிறக்கதிர்கள் தோன்றுகின்றன. திரவங்களில் ஒளி ஊடுருவும் தன்மைக்கேற்ப ஏற்படும் வேறுபாடுகளால் கடல் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது’என்று கண்டறிந்து 1928ல் அறிவித்தார். இது ஒளியியலில் (Optics) புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திட்ட கண்டுபிடிப்பாகும். இதற்காக வெங்கடராமனுக்கு 1930ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்திய அறிவியல் கழகத்தின் (Indian Institute of Science) இயற்பியல் துறைத் தலைவராக பொறுப்பேற்ற வெங்கட்ராமன், 1948 வரை அங்கு பணிபுரிந்தபோது, ஹோமி ஜஹாங்கீர் பாபா உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் வளரக் காரணமானார்.மக்களின் அறிவியல் சிந்தனையை மேம்படுத்த இந்திய அறிவியல் சங்கத்தை (Indian Science Academy) நிறுவி அதன் தலைவராகவும் பணியாற்றினார். அறிவியல் ஆய்வறிக்கைகளை தேசிய அளவில் வெளியிட, 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்ற சஞ்சிகையை நிறுவி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார் வெங்கடராமன்.

சுதந்திர இந்தியா இயற்பியல் துறையில் சிறந்து வளர வேண்டும் என்ற இலக்குடன் 1948ல் ராமன் இயற்பியல் மையத்தைத் துவங்கினார். அது இன்று இந்திய அரசு நிறுவனமாக வளர்ந்து பல விஞ்ஞானிகளை உருவாக்கி வருகிறது.ராமனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் பல துறைகளில் அமைந்தவை. வயலின், மிருதங்கம் முதலான இசைக்கருவிகள், வைரம் போன்ற படிகங்கள் தொடர்பான அரிய ஆராய்ச்சி நூல்களையும் ராமன் அளித்திருக்கிறார். ஒளிச்சிதறல் மீது ஒலி அலைகள் (1935), படிகங்களில் அணுக்களின் அதிர்வுகள் (1940), ரத்தினக் கற்களில் எழும் ஒளிவீச்சு (1950), மனிதக் கண்கள் காணும் பலவண்ணக் காட்சி (1960) ஆகிய அவரது ஆய்வுகள் இன்றும் நவீன அறிவியலுக்கு வழிகாட்டுகின்றன. இவரின் பல்வேறு சிறப்பான ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் ஏராளமான விருதுகளையும், பட்டங்களையும், பதக்கங்களையும், பதவிகளையும் புகழையும் சேர்த்தது. ‘இந்திய நவீன விஞ்ஞானத்தின் தந்தை’ என்று வெங்கட்ராமன் போற்றப்படுகிறார். ‘ராமன் விளைவை’அவர் கண்டறிந்த 1928, பிப்ரவரி 28 தினத்தை கவுவிக்கும் விதமாக, அந்நாளை தேசிய அறிவியல் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.

-சக்திவேல்

The post பட்டங்கள் பல வென்ற நவீன அறிவியலின் வழிகாட்டி appeared first on Dinakaran.

Tags : Chandrasekhara Venkataraman ,
× RELATED ஆரம்பிச்சுட்டாங்கய்யா…...