×

திருப்பாச்சேத்தி அருகே 11ம் நூற்றாண்டு பைரவர் சிலை கண்டுபிடிப்பு

திருப்புவனம் : திருப்பாச்சேத்தி அருகே 11ம் நூற்றாண்டை சேர்ந்த பைரவர் சிலையை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மழவராயனேந்தலில் 11ம் நூற்றாண்டு பைரவர் சிலை மற்றும் சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் காளிராசா கூறியதாவது:

திருப்பாச்சேத்திக்கு வடகிழக்கு பகுதியில் வைகைக் கரையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மழவராயனேந்தல் வடக்கு வாச்செல்லி உத்தம நாச்சியம்மன் கோயில் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கோயிலில் உள்ள ஒரு சிலையை அடையாளம் காணுமாறு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் உதவியுடன் அச்சிலை பைரவர் சிலை என்றும், அது 11ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிவ மூர்த்தங்கள் 64ல் ஒன்றாக பைரவர் வடிவமும் உள்ளது. பொதுவாக பைரவர் சிலை நின்ற கோலத்தில் சூலம், உடுக்கை, பாசக்கயிறு போன்றவற்றை கையில் வைத்திருப்பதோடு நிர்வாணக் கோலத்தில் நாய் வாகனத்துடன் அமைந்திருப்பது வழக்கம். இங்கே காணப்படும் பைரவர் இரண்டு கைகள் மட்டுமே உடையதாகவும் ஒரு கை இடுப்பிலும், மற்றொரு கை அருள்பாலித்த வடிவிலும் காட்டப்பட்டுள்ளன. கழுத்து மற்றும் இடையில் ஆபரணங்கள் காணப்படுகின்றன.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலையாக இருப்பதால் முகம் மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் சொர்ணவல்லி அம்மன் கோயில் என்ற பெயரில் பழைய சிவன் கோயில் ஒன்று இருந்து. முற்றிலும் அழிவுற்ற நிலையில் அங்கிருந்தே இந்த பைரவர் சிலை காலப்போக்கில் வடக்கு வாசெல்லி உத்தம நாச்சியம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்திருக்கலாம்.சிவன் கோயிலுக்குரிய நிலங்கள் எல்லை அளவிட்டு அடையாளம் படுத்த சூலக்கல் நடப்பட்டிருக்கும்.

அவ்வாறான சூலக்கற்கள் மக்கள் வழிபடும் கடவுளாகவும் மாறிப்போயிருக்கின்றன. வடக்கு வாசெல்லி உத்தம நாச்சியம்மன் கோயிலில் சூலக்கல் ஒன்றும் வழிபாட்டில் உள்ளது.
சிவன் கோயிலுக்கு அளவிட்டு வழங்கப்பட்ட எல்லைக்கல் எங்கிருந்தோ கொண்டு வந்து இங்கு நடப்பட்டு பின்பு வழிபாட்டுக்கு உரியதாக மாறி இருக்கலாம்.இவ்வாறு கூறினார்.

The post திருப்பாச்சேத்தி அருகே 11ம் நூற்றாண்டு பைரவர் சிலை கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Bhairava ,Tirupachetty ,Tirupuvanam ,Sivagangai district ,Tirupachetty… ,
× RELATED எதிரிகளை அழிப்பார்; வெற்றியைத் தருவார் பைரவர்!: அஷ்டமியில் பைரவ வழிபாடு