×

திருப்பரங்குன்றில் புவனேஸ்வரி வழிபாடு

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அழகன் முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றாக இருப்பது திருப்பரங்குன்றம். இது குடை வரைக்கோயில் வகையைச் சார்ந்தது. மூலக்கோயிலில் இருப்பவள் துர்க்கையாவாள். இவளுக்கு வலப்புறம் முருகனும், இடப்புறம் விநாயகரும் உள்ளனர். இவர் மூவரும் வடக்கு நோக்கி இருக்க, இவர்களுடைய முன்மண்டத்தில் மேற்கில் சிவபெருமானும் (பரங்குன்றீசர்) கிழக்கில் திருமாலும் (பவளக்கனிவாய் பெருமாள்) எதிர்எதிராகச் சந்நதி கொண்டுள்ளனர்.

மேலும், இங்குள்ள பாறைகளில் ஜேஷ்டாதேவி, அண்டாபரண பூதர். சிறப்புடன் உத்ரமூர்த்தி, பராசரர், வியாசர். பவளக் கனிவாய் பெருமான் பரங்கிநாதர், கஜ லட்சுமி, ஜேஷ்டா சப்தமாதர்கள் முதலியன வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. புவனேஸ்வரியின் வடிவமும் உள்ளது. இதனை இந்த நாளில், அன்னபூரணி என்று அழைக்கின்றனர். இதில் அன்னை உயர்ந்த பீடத்தில் அமைந்திருக்கிறாள். பின்கரங்களில் பாசமும், அங்குசமும் இருக்க, முன் கரங்களில் அபய, வரத முத்திரைகளைத் தாங்கியுள்ளாள். தோளுக்குமேல் இரண்டு அப்சரப் பெண்கள், கவரி வீசிக்கொண்டிருக்கின்றனர். அப்சரப் பெண்களை அடுத்து வலது பக்கம் சூரியனும், இடதுபக்கம் சந்திரனும் பறந்துவரும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அன்னையின் வலப்புறம் நால்வர் அமர்ந்துள்ளனர். இவர்களில் ஒருவர், தியான முத்திரையில் இருகைகளையும் இணைத்து தொடைமீது உள்ளங்கள் மேல்நோக்கி இருக்க வைத்துக்கொண்டுள்ளார். இவர்கள் தலைமீது ஜடா மகுடம் உள்ளது. அவருக்குக்குப் பக்கத்தில் ஒரு முனிவர் கூப்பிய கரங்களுடன் இருக்க, மூன்றாமவர் வலது கை அபய முத்திரை காட்டி இடது கையை மடி மீது வைத்துள்ளார்.

நான்காமவர் குத்திட்டு அமர்ந்து வேணுகானம் புல்லாங்குழல் இசைக்கிறார். இந்தப் பகுதியில் மூவர் நிற்கின்றனர். இவர்கள் மூன்று புவனங்களின் சக்ரவர்த்திகள் ஆவர். இந்த செவ்வக அமைப்பிற்கு வெளியே குத்துவாளும் கேடயமும் கொண்டவராக ஒருவர் இருக்கிறார். இவரை முருகன் என்று சொல்கின்றனர். இவரது கேடயத்தில் மீன் வடிவம் உள்ளது. (சிலர் இவரை அம்பிகை சொல்வதை எழுதிக்கொள்ளும் முருகன் என்கின்றனர்). இடப்புறம் மூன்று முனிவர்கள் அமர்ந்துள்ளனர்.

அவர்களுக்கு அருகில் ஒரு பெண் அமர்ந்து வீணை வாசிக்கின்றாள். இவர்களுக்கு பின்னணியில் மூவர் நிற்கின் றனர். இந்த அமைப்பிற்கு வெளியே திருநந்திதேவர் ரிஷபமுகத்துடன் நின்று கொண்டிருக்கின்றார். (வலது கையை மார்பின் நடுவில் வைத்து ஆத்மஞானம் பெறுபவராகவும் இடதுகையைத் தொடைமீது வைத்து எல்லையில்லாத ஆனந்தத்துடன் இருப்பதைக் குறிப்பவராகவும் இருக்கின்றார்.

இந்த புடைப்புச்சிற்பம் புவனேஸ்வரியை மூன்று புவனங்களின் அதிபதிகளும் ஆறு அந்தங்களை உணர்ந்த ரிஷிகளும். வெற்றியை விரும்புபவர்களும் அன்னை குழலோசையிலும் வீணை இசையிலும் லயித்து இருப்பதைக் குறிப்பதாக இருக்கிறது. இத்தகைய ஒப்பற்ற புவனேஸ்வரி வடிவத்தை வேறு எந்தத் தலத்திலும் காண முடியவில்லை.

(இங்கு நிற்கும் ஆறுபேரையும் ஆறு பருவகால தேவர்கள் என்று சிலர் சொல்கின்றனர். தேவிபாகவதத்தில் அன்னையின் மணி தீபத்தில் இந்த ஆறு பருவகாலத் தேவர்களும் அவர்கள் மனைவியர் மாளிகை அழகு போன்றவற்றை விரிவாகக் கூறப்பட்டிருப் பதையொட்டி இக்கருத்தை வலியுறுத்துகின்றனர்). இத்தகைய பக்தர் பெருங்கூட்டத்துடன் அன்னை புவனேஸ்வரியை எங்கும் காண முடியவில்லை. தலபுராணத்தில் இந்த அம்பிகையைப் போற்றும் வகையில் கடவுள் வாழ்த்துப் பகுதியில் ஒரு பாடல் அமைந்துள்ளது. `ஆதிபுவனேஸ்வரி துதி’ என்னும் பெயரில் இடம்பெற்றுள்ள அப்பாடல்,

மருவிசிறு பசுங்களபச் சேறொழுக
திரண்டமுலை மார்பினாளை
கருணை நிறைந்தருவி எழக் கசிந்து
கசிந்தூற்றும் இருகடைக் கண்ணாளை

இருபுறமும் மாதவர்கள் இருந்து கரம்
குவிக்க வளர் இயல்பினாளை அருள்
பெருகும் பரங்கிரியில் ஆதி
புவனேஸ்வரியை அகத்துள் வைப்பாம்
என்பதாகும்.

தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்

The post திருப்பரங்குன்றில் புவனேஸ்வரி வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Tiruparangun ,Tiruparangunram ,Lord Murugan ,Moolakoil… ,
× RELATED கிரிவலப் பாதையில் உள்ள செடி, கொடி, மரங்களில் திடீரென தீ!