×

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் என நியமன எம்.பி. ரஞ்சன் கோகோய் சர்ச்சை பேச்சு… காங்கிரஸ் கண்டனம்

டெல்லி : இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று நியமன எம்.பி. ரஞ்சன் கோகோய் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ள நிலையில், அரசியல் அமைப்பு சட்டத்தை தகர்ப்பதற்கான வேலையை பாஜக தொடங்கிவிட்டதாக காங்கிரஸ் சாடி உள்ளது. மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட டெல்லி மசோதா மீதான விவாதத்தில் டெல்லி நியமன எம்.பி.யும் முன்னாள் தலைமை நீதிபதியுமான ரஞ்சன் கோகோய் பங்கேற்றார். கடந்த 2020ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டு முதன்முறையாக அவையில் பேசிய அவர், மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். அதே நேரம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டுமானத்தையே விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்தார்.

அவர் கூறிய கருத்திற்கு காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஞ்சன் கோகோயின் கருத்தை பாஜக ஏற்று கொள்கிறதா என்று அவர் கேள்வி எழுப்பினார். பின்னர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கே.சி.வேணுகோபால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை முற்றிலும் தகர்த்து போடுவதற்கான பாஜகவின் தந்திரம் இது என்று சாடியுள்ளார். ஜனநாயகம், சமத்துவம், மதச் சார்பின்மை, கூட்டாட்சி தத்துவம், நீதித்துறை சுதந்திரம் ஆகியவற்றை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டுமா என்று கே.சி.வேணுகோபால் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை அழிக்கும் நடவடிக்கைகளை பாஜக தொடங்கி விட்டது என்றும் வேணுகோபால் எச்சரித்துள்ளார். இதனிடையே ரஞ்சன் கோகோய் நேற்று அவையில் பேசிய போது, ஜெயா பச்சன் உட்பட 4 பெண் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். தலைமை நீதிபதியாக இருந்த போது ரஞ்சன் கோகோய் பாலியல் புகாருக்கு ஆளானவர் என்பதால் பெண் எம்பிக்கள் வெளிநடப்பு செய்ததாக தெரிகிறது.

The post இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் என நியமன எம்.பி. ரஞ்சன் கோகோய் சர்ச்சை பேச்சு… காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : M.P. ,Ranjan Gogoi ,Congress ,Delhi ,
× RELATED பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல்...