×

நாட்டின் வளர்ச்சியில் புதுச்சேரியின் பங்கும் இருக்கிறது

புதுச்சேரி, ஆக. 8: நாட்டின் வளர்ச்சியில் புதுச்சேரியின் பங்கும் உள்ளது என கவர்னர் தமிழிசை கூறியுள்ளார். ஜிப்மர் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் ரூ. 17 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கான உயர்தர கதிரியக்க சிகிச்சை கருவியின் செயல்பாட்டை ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்தார். இதில் கவர்னர் தமிழிசை பேசுகையில், இந்த உலகிற்கே ஜனாதிபதி முன் மாதிரியாக விளங்கி கொண்டிருக்கிறார்.
இந்த நாட்டின் வளர்ச்சியிலும், சுதந்திரத்திலும் புதுச்சேரி பங்கு இருக்கிறது. அரவிந்தர், பாரதியார் ஆகியோர் புதுச்சேரி வந்தனர், அது சரித்திரமானது. இன்றைக்கு ஜனாதிபதியும் வந்திருக்கிறார், இதுவும் சரித்திரமாகும். பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் வரிகள் இன்று ஜனாதிபதியால் உயிர் பெற்று எழுந்து வந்துள்ளது.

பட்டங்கள் ஆள்வதில் பெண்கள் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டோம், தலைவியாய் சட்டங்கள் செய்வதில் நமது ஜனாதிபதியை பார்க்கிறோம். தனிப்பட்ட வாழ்க்கை சோகம், ஆனால் முன்னேற வேண்டும் என்ற தணியாத தாகம். அமைதியான பணி, காட்டவில்லை வேகம். தன் பணியில் மட்டுமே கொண்டார் மோகம், இன்று அவரை கண்டு வியக்கிறது உலகம். புலியை முறம் கொண்டு அடித்த தமிழ் பெண்ணின் வீரத்தை ஜனாதிபதியிடம் பார்க்கிறேன். சுதந்திரத்துக்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மை சோகத்தின் தொல்லை போக்கி சகாசப்பெண்ணை வீற்றிருப்பதை போல் உணர்கிறேன். வீரத்தோடு போராடிய வேலு நாச்சியார், விதியை வெற்றிக்கொண்டு வீற்றிருப்பதைபோல உணர்கிறேன். இந்த ஒட்டுமொத்தமாக பெண்மையின் முழு உருவமாக ஜனாதிபதியை பார்க்கிறேன். சாமானிய குடிமக்கள் கூட ஜனாதிபதியாக வரலாம் என்பதை உணர்த்தி அமர்ந்திருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

The post நாட்டின் வளர்ச்சியில் புதுச்சேரியின் பங்கும் இருக்கிறது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Governor Tamil Nadu ,Jipmer ,
× RELATED புற்றுநோய் நோயாளிகள் அலைக்கழிப்பு ஜிப்மர் அதிகாரியிடம் முறையீடு