×

மாணவர்கள் லைசென்ஸ் இல்லாமல் டூவீலரை ஓட்ட அனுமதிக்க கூடாது: பெற்றோருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மாணவர்கள் லைசென்ஸ் இல்லாமல் டூவீலரை ஓட்ட அனுமதிக்கக்கூடாது என பெற்றோருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் முத்துமணி. சிவகாசியில் உள்ள கல்லூரியில் படித்தார். கடந்த 7.4.2018ல் கல்லூரி முடிந்து நண்பருடன் டூவீலரில் வீட்டிற்கு திரும்பியபோது லாரி மோதி இறந்தார். தங்களுக்கு இழப்பீடு கோரி, முத்துமணியின் பெற்றோர் தரப்பில் விருதுநகர் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய லாரி இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நிறுவனத்தின் சார்பில் ரூ.16 லட்சத்து 92 ஆயிரத்து 800 இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு: விபத்தில் இறந்தவரிடம் லைசென்ஸ் இல்லை. விபத்திற்கு லாரி டிரைவர் மட்டுமே காரணமில்லை. இறந்தவரும் டூவீலரை மிக அதிவேகமாக ஓட்டி முந்திச் சென்றுள்ளார். எனவே, இருவரையும் சமமாக ெபாறுப்பாக்க வேண்டியுள்ளது. எனவே, இழப்பீட்டுத் தொகையை ரூ.19 லட்சத்து 24 ஆயிரத்து 400 ஆக இந்த நீதிமன்றம் நிர்ணயிக்கிறது. இதில், 50 சதவீதம் ரூ.9 லட்சத்து 62 ஆயிரத்து 200ஐ 7.5 சதவீத வட்டியுடன் இன்சூரன்ஸ் நிறுவனம் இறந்தவர் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும். இதுபோன்ற விபத்துகளில் ஏராளமான மாணவர்கள் சிக்குகின்றனர்.

பள்ளி முதல் கல்லூரி படிக்கும் மாணவர்கள் பலர் தற்போது டூவீலர் ஓட்டுகின்றனர். உரிய லைசென்ஸ் இன்றி பெற்றோரின் கட்டுப்பாட்டை மீறி ஓட்டுவதால் விபத்தை சந்திக்கின்றனர். மாணவர்கள் டூவீலர் ஓட்டாமல் தடுப்பது பெற்றோரின் கடமை. உரிய வயதை அடைந்ததும், லைசென்ஸ் பெற்ற பிறகே டூவீலர் ஓட்ட அனுமதிக்க வேண்டும். ஆனால் தற்போதைய சமூகத்தில் குறிப்பாக ஊரக பகுதிகளில் பெற்றோர்கள் கண்டுகொள்வதே இல்லை. பள்ளி செல்லும்போது லைசென்ஸ் இன்றி டூவீலரில் செல்ல அனுமதிக்கின்றனர். இதுபோன்ற செயலால் உயிரிழப்பு ஏற்படுவதுடன், இளைஞர்கள் இல்லாதது சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, பெற்றோர்கள் மாணவர்களை லைசென்ஸ் இன்றி டூவீலர் ஓட்ட அனுமதிக்க கூடாது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

The post மாணவர்கள் லைசென்ஸ் இல்லாமல் டூவீலரை ஓட்ட அனுமதிக்க கூடாது: பெற்றோருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,iCort ,Virutunagar District, Editangalai ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...