×

ஒன்றிய அமைச்சரை கண்டித்து ஆற்று மண்ணில் புதைந்து விவசாயிகள் போராட்டம்: அய்யாக்கண்ணு உள்பட 35 பேர் கைது

திருச்சி: ஒன்றிய அமைச்சரை கண்டித்து காவிரி ஆற்று மண்ணில் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உட்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர். காவிரியில் மாதந்தோறும் தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் கூறியும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் வஞ்சிக்கிறது. இதுபற்றி ஒன்றிய அமைச்சர், கர்நாடகாவிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று கூறியிருப்பதை கண்டித்து திருச்சி மேலசிந்தாமணி அண்ணாசிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த மாதம் 28ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று 11வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் திருச்சி காவிரி ஆற்றில் 10 அடி ஆழத்தில் இறங்கி தண்ணீர் இல்லாத பகுதிக்கு சென்று குழிதோண்டி கழுத்தளவு மணலில் புதைந்து ஒன்றிய அமைச்சரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்து வந்த ரங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் அய்யாக்கண்ணு உள்பட 35 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

The post ஒன்றிய அமைச்சரை கண்டித்து ஆற்று மண்ணில் புதைந்து விவசாயிகள் போராட்டம்: அய்யாக்கண்ணு உள்பட 35 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Union minister ,Ayyakannu ,Trichy ,Ayakkannu ,Kaviri ,Ridi ,Ayakkanand ,Dinakaran ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...