×

குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு இந்திரதனுஷ் தடுப்பூசி 5.0 திட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை: 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு விடுபட்ட தடுப்பூசி தவணைகள் செலுத்தும் இந்திரதனுஷ் தடுப்பூசி 5.0 திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில், 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு விடுபட்ட தடுப்பூசி தவணைகள் செலுத்தும் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் 5.0 திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பதாகை, சுவரொட்டி, ஆடியோ, காணொவி, தவறிய தடுப்பூசி தவணை குறித்த விளக்கம், யு-வின் வளைதளத்தில் தடுப்பூசி சான்றிதழ் தொடர்பான தொடர்பான சாதனங்களை வெளியிட்டார்.

பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாட்டில் 2023ம் ஆண்டு தீவிர மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டம், மூன்று கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் முகாம் நேற்று முதல் 12ம் தேதி வரையிலும், 2ம் முகாம் அடுத்த மாதம் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலும், மூன்றாவது முகாம் அக்டோபர் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலும், ஒவ்வொரு சுற்றும் 6 நாட்கள் நடத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் 9.16 லட்சம் பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்துவது ஒரு இயக்கமாக செயல்பட்டு வருகிறது. தடுப்பூசி சேமித்து வைப்பதிலும், அதை முறையாக செலுத்துவதிலும் தமிழ்நாடு முன்மாதிரியாக இருந்து வருகிறது.

கடந்த 2014 முதல் 8 கட்டங்களாக நடைபெற்றுள்ள தீவிர மிஷன் இந்திர தனுஷ் திட்டத்தின் மூலம் 2,98,123 கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் 6,94,083 குழந்தைகளுக்கு தடுப்பூசி தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் விடுபட்ட, தவணை தவறிய 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் ஆகியோரை கண்டறிய வீடுவீடாக கணக்கெடுக்கும் பணி நடந்தது. அதில் 69,901 குழந்தைகளும், 13,901 கர்ப்பிணி தாய்மார்களும் தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்டுள்ளது என்று கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் இந்திர தனுஷ் திட்டத்தை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த விவரங்கள் யு-வின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றார்.

The post குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு இந்திரதனுஷ் தடுப்பூசி 5.0 திட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. ,Supramanyan ,Chennai ,Indirudhandush ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...