×

பூந்தமல்லி அருகே ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா: பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பு

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலில் தீ மிதி விழா நடைப்பெற்றது. இதில், பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் பிரசித்தி பெற்ற ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நடப்பாண்டு ஆடி திருவிழா, கடந்த மாதம் 28ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து 10 நாட்களுக்கும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7ம் நாளன்று 1008 பால்குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக வந்து, எல்லையம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

10ம் நாளான நேற்று முன்தினம் மாலை ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து, மஞ்சள் ஆடை அணிந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். முன்னதாக, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, இரவு உற்சவர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவை முன்னிட்டு வாணவேடிக்கை, இன்னிசை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக மதியம் பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் பூவை ஜெயக்குமார், ரவிக்குமார் தலைமையில் 3 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் பூவை ஞானம், நிர்மலா ஞானம் தலைமையில் விழா குழுவினர், உபயதாரர்கள், ஊர்ப்பொதுமக்கள் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

The post பூந்தமல்லி அருகே ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா: பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Thee Mithi Festival ,Oothukattu Behanayamman Temple ,Poontamalli ,Uthukkatu Behanayamman Temple ,
× RELATED பஞ்சு மெத்தை குடோனில் தீ விபத்து