×

வழித்தடம் 3ல் சுரங்கம் தோண்டும் பணி முடிவடைந்தது அனைத்து மெட்ரோ ரயில் பணிகளும் 2028க்குள் நிறைவுபெறும்: திட்ட அதிகாரிகள் தகவல்

சென்னை: வழித்தடம் 3ல் சுரங்கம் தோண்டும் பணி முடிவடைந்ததையடுத்து 2028க்குள் அனைத்து மெட்ரோ ரயில் பணிகளும் நிறைவு பெறும் என்று திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவையை சென்னையில் தொடங்கியது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2ல் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. வழித்தடம் 3 (45.4 கி.மீ) மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான பணி, வழித்தடம் 4ல் (26.1 கி.மீ) கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையம் முதல் பூந்தமல்லி பணிமனை வரையிலான பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் வழித்தடம் 3ல் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு, இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. சுரங்கம் தோண்டும் இயந்திர (நீலகிரி எஸ்-96) பணிகளை வழித்தடம் 3-ல் (உயர் பாதை) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாதவரம் பால் பண்ணை மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார். இவ்வாறு தொடங்கப்பட்ட 1.4 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணி நேற்று மாதவரம் நெடுஞ்சாலையை வந்தடைந்தது. இந்த நிறைவு நிகழ்ச்சியை அதிகாரிகள் கொண்டாடினர்.

அப்போது அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மெட்ரோ பணிகளை பொறுத்தவரை இரண்டாம் கட்ட பணி சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 23 சுரங்கம் தோண்டும் பணியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தார். இரண்டு இயந்திரங்கள் வேணுகோபால் நகரிலும், மேலும் இரண்டு இயந்திரங்கள் மாதவரம் நெடுஞ்சாலையிலும் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இரண்டில் ஒன்று இரண்டு மாதத்துக்கு முன்பு ஜூன் 7ம் தேதி பூமியை துளைத்துக் கொண்டு இயந்திரம் வெளியே வந்து பணிகள் முடிவடைந்துவிட்டன.

இதனையடுத்து மாதவரம் பால் பண்ணையில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதுபோன்று 50க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற உள்ளன. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இதுபோன்ற பணிகள் நடைபெறும். 23 இயந்திரங்களில் 19 இயந்திரம் ஆங்காங்கே பணிகளை செய்து வருகின்றன. 4 இயந்திரங்கள் மூலம் நாதமுனி – ரெட்டேரியை இணைக்கும் பணிகள் நடக்கிறது. அடுத்த ஆண்டுக்குள் 23 இயந்திரங்களாலும் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெறும். சுரங்கம் தோண்டுவதற்கான 23 இயந்திரங்கள் ஜெர்மனி, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கொண்டுவரப்படுகிறது. இந்த பணிகளில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களுக்கும், உள்ளே பணி செய்பவர்களுக்கும் மிகவும் கடினமான வேலை இருக்கும். அதனால் அவர்களுக்கு ஆக்சிஜன் லெவல், உயர் அழுத்தத்தை அடிக்கடி பரிசோதிக்கிறோம்.

வெப்ப உயர் அழுத்தத்தை பரிசோதிக்கும் கருவி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்கள் இங்கே தயார் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ வசதி தயார் செய்யப்படுகிறது. 17,000 தொழிலாளர்கள் பணி செய்கிறார்கள். 2025 நவம்பரில் பூந்தமல்லியில் இருந்து பவர் ஹவுஸ் வரை இணைப்பதற்கு திட்டம் உள்ளது. 2028ல் 100 % அனைத்து இடங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவு பெறும். ஒரு சுரங்கம் தோண்டுவதற்கான பணியில் 700 தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள். இத்திட்டம் ரூ.63 ஆயிரத்து 640 கோடியில் வெற்றிகரமாக நிறைவு பெறும்.

The post வழித்தடம் 3ல் சுரங்கம் தோண்டும் பணி முடிவடைந்தது அனைத்து மெட்ரோ ரயில் பணிகளும் 2028க்குள் நிறைவுபெறும்: திட்ட அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Route 3 ,Chennai ,Dinakaran ,
× RELATED 3 பெட்டிகள் கொண்ட 138 ஓட்டுநர் இல்லா...