×

என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் விவசாயிகள் அறுவடை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும்: அரசியல் கட்சிகள் போராட தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி மேல்பாதி பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் வாய்க்கால் வெட்டும் போது நெற்பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்குமாறு என்.எல்.சிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, என்.எல்.சி தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த நான்கு நாட்களில் 88 விவசாயிகளுக்கு சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தபட்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் தொடர்ந்து விவசாயம் செய்வதை அத்துமீறலாகவே கருத வேண்டும். கடந்த 2006ம் ஆண்டு முதல் 2023 வரை என்.எல்.சி.க்காக 602 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான இழப்பீடு மற்றும் கருணை தொகை பெற்றுள்ள நிலத்தின் உரிமையாளர்கள் நிலத்தின் உரிமையை கொண்டாட முடியாது. என்பதால் மனுவை ஏற்க கூடாது என்று வாதிட்டார். தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், கருணைத் தொகை பெறாதவர்களுக்கு கருணைத் தொகை வழங்குவதற்காக ஒவ்வொரு கிராமத்துக்கும் அரசு அதிகாரிகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருணைத்தொகை செப்டம்பர் 15ம் தேதிக்குள் வழங்கப்படும். அதற்குள் விவசாயத்தை முடித்து அறுவடை செய்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றார்.

இதை பதிவு செய்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கருணைத் தொகை முழுவதையும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் வழங்க வேண்டும். அந்த தேதியில் நிலத்தை விவசாயிகள் ஒப்படைக்க வேண்டும். புதிதாக எந்த பயிரும் பயிரிடக்கூடாது. இதை மீறுவோருக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம். நிலத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு என்பது 2014க்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும். அதற்கு முன்பாக நிலத்தை கொடுத்தவர்களுக்கு வழங்க முடியாது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்தது என்பது அத்துமீறலாகவே கருதப்படும். பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபடுவது போராட்டங்களில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அதற்கு இழப்பீட்டை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டியது அரசின் கடமை என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

The post என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் விவசாயிகள் அறுவடை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும்: அரசியல் கட்சிகள் போராட தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : NLC ,Chennai ,N.L.C. ,half ,Rangamadevi ,Dinakaran ,
× RELATED பைக் மோதி டெய்லர் பலி