×

அரியானாவில் கலவரம் நடந்த நூஹ் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

குருகிராம்: அரியானாவில் கலவரம் நடந்த நூஹ் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் விஷ்வ இந்து பரிசத் ஊர்வலத்தில் கடந்த மாதம் 31ம் தேதி கலவரம் வெடித்தது. ஊர்வலத்தை ஒரு தரப்பினர் மறித்ததால் மோதல் உருவாகி 6 பேர் கொல்லப்பட்டனர். ஏராளனமாக கடைகள், வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. அதை தொடர்ந்து நூஹ் பகுதியில் அரியானா மாநில அரசு சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திடீரென தொடங்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள், கடைகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடித்து தள்ளப்பட்டன. சுமார் 350 கட்டிடங்கள் இதுவரை இடிக்கப்பட்டன.

இந்த திடீர் ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்தும், பா.ஜ முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசுக்கு எதிராகவும் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சந்த்ஹாவாலியா உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நிறுத்த உத்தரவிட்டார். அரியானா அரசு உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்தவும் அவர் அறிவுறுத்தினார். இதையடுத்து நேற்று தொடங்கிய ஆக்கிரமிப்பு இடிக்கும்படி நிறுத்தப்பட்டது. புல்டோசர் மூலம் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் துணை ஆணையர் திரேந்திர கட்கடா கேட்டுக் கொண்டார். இதற்கிடையே நூஹ் பகுதியில் நேற்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது. அங்கு ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டன. துணை ராணுவப்படையினர் ரோந்து வந்தனர். ஆனால் இணையதள தடை தொடர்ந்து அமலில் உள்ளது.

* இந்திய கம்யூனிஸ்ட் குழுவுக்கு தடை
நூஹ் பகுதியில் நடந்த கலவரப்பகுதிகளை பார்வையிட இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று முன்தினம் 4 பேர் கொண்ட குழு அங்கு சென்றது. அந்த குழுவினரை போலீசார் உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் குழுவுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி பினோய் விஸ்வம் கூறுகையில்,’ இதுதான் இன்றைய நாட்டின் அவல நிலை. காவல்துறை நம்மைக் கூட அனுமதிப்பதில்லை. அதாவது இந்த ஆட்சியில் நடமாடும் சுதந்திரம் கூட தடை செய்யப்பட்டுள்ளது. குண்டர்கள் மட்டும் சுதந்திரமாக நடமாட முடியும்’ என்றார்.

* வழிபாட்டுதலத்துக்கு தீ
குருகிராம் அருகே பாரபங்கி மாவட்டத்தில் கண்ட்சா கிராமத்தில் பெரோஸ் காந்தி காலனியில் உள்ள மசார் என்ற வழிபாட்டுதலத்துக்கு நேற்று அதிகாலை 6 பேர் கொண்ட சிறுவர்கள் தீ வைத்தனர். இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நூஹ் மாவட்டத்தில் தொடங்கிய வகுப்புவாத மோதல்கள் குருகிராமிலும் பரவியது. அங்கு 144 தடை நேற்று தான் நீக்கப்பட்டது.

The post அரியானாவில் கலவரம் நடந்த நூஹ் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nooh ,Haryana ,Gurugram ,High Court ,Aryana ,Nuh ,Court ,Dinakaran ,
× RELATED அரியானாவில் பாஜ ஆட்சிக்கு சிக்கலா?: முதல்வர் பரபரப்பு பேட்டி