×

காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி தீவிரவாத இயக்க தலைவனை சுட்டு கொன்றது ராணுவம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ஊடுருவ முயன்ற ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க முக்கிய தலைவன் உட்பட 2 பேரை ராணுவம் சுட்டு கொன்றது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் தேக்வார் செக்டர் எல்லை கட்டுப்பாடு கோடு நேற்று அதிகாலையில் ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருட்டை பயன்படுத்தி தீவிரவாதிகள் எல்லைக்கோடு வழியே ஊடுருவ முயற்சித்ததை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து உஷரான ராணுவம் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டு படை சரணடையும்படி கூறியது. ஆனால் மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் சுட்டதில் ஒரு தீவிரவாதி பலியானான்.

இன்னொரு தீவிரவாதி தப்பியோட முயற்சித்தான். அப்போது அவன் மீது துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தான். இதில் ஒரு தீவிரவாதி உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில்,‘‘ சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதி ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தலைவனான முனேசர் உசேன் என்பது தெரியவந்தது. இவன் 1993ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று அங்கு ஆயுத பயிற்சி பெற்ற பின் காஷ்மீருக்கு வந்து பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளான்’’ என்றார்.

* பாகிஸ்தான் நபர் கைது
பாலகோட் செக்டரில் எல்லை கோடு வழியே இந்தியாவுக்குள் ஊடுருவிய அபு வகாப் அலி(22) என்பவரை பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்தனர். அவர் தவறுதலாக இந்திய பகுதிக்குள் நுழைந்து விட்டதாக தெரியவந்துள்ளது. எனினும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி தீவிரவாத இயக்க தலைவனை சுட்டு கொன்றது ராணுவம் appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Jammu ,Hizbul Mujahideen ,Poonch ,
× RELATED அடித்து ஊத்திய பேய்மழை…தண்ணீரில் மிதக்கும் காஷ்மீர்..!!