×

இந்தியமுறை மருத்துவ படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா படிக்க 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: இந்திய மருத்துவ ஆணையரகம் அறிவிப்பு

சென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இந்தியமுறை மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி ஆணையரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

இதேபோல, 28 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,820 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.
பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய பட்டப் படிப்புகளுக்கு சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் ஆகஸ்ட் 6ம் தேதி வெளியிடப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 25-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600106 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

The post இந்தியமுறை மருத்துவ படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா படிக்க 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: இந்திய மருத்துவ ஆணையரகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Medical Commission of India ,Chennai ,Unani ,
× RELATED மசாலாக்களின் மறுபக்கம்…