×

மணிப்பூரில் மறுவாழ்வு, நிவாரணம் வழங்க 3 மாஜி பெண் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: மணிப்பூர் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்க 3 முன்னாள் பெண்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழுவை அமைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. மணிப்பூர் மாநிலம் கடந்த மே 3ம் தேதி முதல் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஒரு கும்பலால் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ்மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த ஆக.1ம் தேதி விசாரித்த போது, மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு இயந்திரங்கள் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், மறுவாழ்வு அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் (ஓய்வு) ஷாலினி பி ஜோஷி மற்றும் ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. மணிப்பூர் மாநிலத்தில் சட்டத்தின் மீது நம்பிக்கையை மீட்டெடுப்பதே உச்ச நீதிமன்றத்தின் முயற்சி என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

மேலும் நீதித்துறை குழுவைத் தவிர, மணிப்பூர் சிறப்பு விசாரணை குழுக்களால் விசாரிக்கப்படும் குற்ற வழக்குகளின் விசாரணையை மேற்பார்வையிட மூத்த காவல்துறை அதிகாரிகளை அமைக்க வேண்டும். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற இணையதளத்தில் விரிவான உத்தரவு பதிவேற்றப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஒன்றிய அரசு மற்றும் மணிப்பூர் அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர், கலவர வழக்குகளை பிரிப்பது உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக ஆகஸ்ட் 1ம் தேதி உச்ச நீதிமன்றம் கேட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தனர். அப்போது,’ அரசு மிகவும் மேம்பட்ட நிலையில் நிலைமையைக் கையாண்டு வருகிறது. முக்கியமான வழக்குகளை விசாரிக்க, மாவட்ட அளவில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுக்களை (எஸ்ஐடி) அமைக்க மாநில அரசு முன்மொழிந்துள்ளது’ என்று அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி தெரிவித்தார்.

* விசாரணைக்குழு தலைவராக மாஜி மகாராஷ்டிரா டிஜிபி நியமனம்
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறும்போது,’ மணிப்பூரில் பெண்கள் பாதிக்கப்பட்டது தொடர்பான 11 எப்ஐஆர்கள் சிபிஐக்கு மாற்றப்படும். மற்ற வழக்குகளை நாங்கள் சிபிஐக்கு மாற்றப் போவதில்லை. ஏனென்றால் உங்களிடம் (மாநில அரசு) விசாரணை நிறுவனம் இருப்பதால் அது விசாரணையைக் கவனிக்கும். ஆனால் நம்பிக்கை உணர்வு இருப்பதை உறுதி செய்வதற்காக, துணைக்கண்காணிப்பாளர் பதவிக்கும் குறையாத 5 அதிகாரிகளை பல்வேறு மாநிலங்களில் இருந்து சிபிஐக்குக் கொண்டு வந்து விசாரணையை மேற்பார்வையிட வேண்டும். இந்த அதிகாரிகள் சிபிஐயின் நிர்வாக அமைப்பிற்குள் செயல்படுவார்கள். சிபிஐ இணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியால் வழக்குகளை கண்காணிக்கப்படலாம். மேலும் நாங்கள் எங்களுக்காக இன்னும் ஒரு அடுக்கு ஆய்வு குழுக்களை சேர்க்கப் போகிறோம். நாங்கள் ஏற்கனவே அந்த அதிகாரியை அடையாளம் கண்டுவிட்டோம். முன்னாள் மகாராஷ்டிர டிஜிபி தத்தாத்ரே பட்சல்கிகர் ஒட்டுமொத்த விசாரணையைக் கண்காணித்து முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்பார் என்று தெரிவித்தனர்.

* வெளிமாநில டிஐஜிக்கள் கண்காணிப்பில் 42 புலனாய்வுக்குழு
நீதிபதிகள் கூறுகையில், ‘‘சிபிஐக்கு மாற்றப்படாத வழக்குகளை சுமார் 42 மாநில சிறப்பு புலனாய்வுக்குழுக்கள் விசாரிக்கும். இந்த சிறப்பு புலனாய்வுக்குழுக்கள் ஒவ்வொன்றிற்கும் குறைந்தபட்சம் மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டரையாவது மணிப்பூர் காவல்துறை பிரதிநிதித்துவத்தில் கொண்டு வர வேண்டும். இந்த 42 சிறப்பு புலனாய்வுக்குழுக்கள் மணிப்பூர் மாநிலத்திற்கு வெளியில் இருந்து வரும் 6 டிஐஜி தகுதி கொண்ட அதிகாரிகளால் கண்காணிக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

* மணிப்பூர் தலைமை செயலாளர், டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்
மணிப்பூர் கலவரத்தில் பெண்களை குறிவைத்து நடந்த தாக்குதலில் தாமதமான மற்றும் மந்தமான விசாரணைக்காக மணிப்பூர் டிஜிபியை நேரில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதை தொடர்ந்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் மணிப்பூர் தலைமைச் செயலர் வினீத் ஜோஷி, மாநில டிஜிபி ராஜீவ் சிங் ஆகியோர் ஆஜராகினர். அப்போது கலவரம் தொடர்பாகவும், வழக்குகள் தொடர்பாகவும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

* சொலிசிட்டர் ஜெனரல் கருத்தை திரும்ப பெற வழக்கு
மணிப்பூரில் உரிமை கோரப்படாத உடல்கள் அங்கு ஊடுருவிய மக்களின் உடல்கள் என்று கருத்து தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு எதிராக மணிப்பூர் பழங்குடியினர் பெண்கள் குழு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தள்ளது. அதில் மணிப்பூரின் குக்கி-ஹ்மர்-ஜோமி சமூகத்தின் தாய்மார்கள், சொலிசிட்டர் ஜெனரல் கூறிய கருத்துகளால் ஆழ்ந்த வேதனையும் திகைப்பும் அடைந்துள்ளதாகவும், நாட்டின் சொலிசிட்டர் ஜெனரலின் இத்தகைய தவறான மற்றும் ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல வெறுக்கத்தக்கது. நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த சட்டப் பதவியை வகிக்கும் ஒருவருக்கு இது பொருந்தாது. எனவே சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

* மணிப்பூர் பழங்குடியினர் அமைப்பு இன்று அமித்ஷாவுடன் சந்திப்பு
மணிப்பூரில் உள்ள பழங்குடியினர் கூட்டம் இன்று டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தனி அரசியல் நிர்வாகம் மற்றும் குகி-ஜோ சமூக உறுப்பினர்களை சுராசந்த்பூர் மாவட்டத்தில் மொத்தமாக அடக்கம் செய்வது உள்ளிட்ட ஐந்து முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளனர்.

* அசாம் ரைபிள்ஸ் படைக்கு எதிராக மெய்தி பெண்கள் போராட்டம்
மணிப்பூர் மாநிலம் இம்பால் பள்ளத்தாக்கில் அசாம் ரைபிள்ஸ் படையினருக்கு எதிராக மீரா பைபி என்ற மெய்தி பெண்களின் கூட்டுப் போராட்டம் நேற்று நடைபெற்றது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து அசாம் ரைபிள் படைகளை அகற்றக் கோரியும், அவர்களது அத்துமீறல்கள் குறித்தும் அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது சாலைகளை மறித்து, பல்வேறு பகுதிகளில் உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்தினர். இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஹோடம் லீராக் பகுதியி பெண்கள் தெருக்களில் இறங்கி, பிஷ்னுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலையை மறித்தனர். இம்பால் மேற்கு மாவட்டம், இம்பால் கிழக்கு மாவட்டம், தவுபால், பிஷ்ணுபூர் மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

* ஊரடங்கு தளர்வு
இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் நேற்று காலை 5 மணி முதல் மதியம் வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டது. பொதுமக்கள் மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு வசதியாக காலை 5 மணி முதல் மதியம் வரை பொதுமக்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து நடமாடுவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

* நாளை பேரணி நடத்த
நாகா அமைப்பு அழைப்பு
மணிப்பூரில் உள்ள சக்திவாய்ந்த நாகா அமைப்பு,ஒன்றிய அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்க அழுத்தம் கொடுப்பதற்காக நாளை நாகா மக்கள் வசிக்கும் பகுதிகளில் மாபெரும் பேரணிகளை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. தமெங்லாங், சேனாபதி, உக்ருல் மற்றும் சண்டல் மாவட்டங்களின் மாவட்டத் தலைமையகங்களில் நாளை காலை 10 மணி முதல் பேரணிகள் நடைபெறும் என்று ஐக்கிய நாகா கவுன்சில் (யுஎன்சி) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

* சோனியா, ராகுல், கார்கேவுடன் மணிப்பூர் காங். தலைவர்கள் சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் மணிப்பூரைச் சேர்ந்த கட்சித் தலைவர்களை சந்தித்தனர். அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலத்தின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. மணிப்பூர் குழுவில் முன்னாள் முதல்வர் இபோபி சிங், மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கே.மேகச்சந்திர சிங், சட்டப்பேரவை காங்கிரஸ் துணைத் தலைவர் கே.ரஞ்சித் சிங், மணிப்பூர் காங்கிரஸ் பொருளாளர் லோகேஷ்வர் சிங்கும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post மணிப்பூரில் மறுவாழ்வு, நிவாரணம் வழங்க 3 மாஜி பெண் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Committee of 3 ex-women ,High Court ,Manipur ,Supreme Court ,New Delhi ,
× RELATED அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த...