×

தனியார் பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 5 மாணவர்கள் காயம்: பெற்றோர் சாலை மறியல்

பல்லாவரம்: குன்றத்தூர் அடுத்த கோவூர் பிரதான சாலையில் பிரபல தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. அவற்றில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி வகுப்பறையில் பாடம் படித்துக்கொண்டிருந்த எல்கேஜி மாணவர்கள் மீது திடீரென மேற்கூரை சிமென்ட் கலவை பெயர்ந்து விழுந்து 5 மாணவர்கக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பள்ளி நிர்வாகம், காயமடைந்த மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, இதுகுறித்து பெற்றோருக்கு தாமதமாக தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. அப்போது, இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பள்ளியில் பயின்ற மற்ற மாணவர்களின் பெற்றோருக்கு தெரிந்த நிலையில் நேற்று பள்ளிக்கு திரண்டு வந்த 200க்கும் மேற்பட்ட பெற்றோர், தங்களது பிள்ளைகளை வகுப்பறையில் விட்டுவிட்டு, பள்ளியின் வெளியே நின்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், பள்ளியின் தாளாளர் வந்தால் மட்டுமே கலைந்து கொள்வோம் என்று கூறினர். இதனையடுத்து, பள்ளியின் தாளாளர் வந்த நிலையில், அவரை பள்ளி நுழைவாயிலில் சிறை பிடித்து சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். பின்னர், பள்ளி வளாகத்திற்கு அழைத்து சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் எப்படி மேற்கூரை பூச்சுகள் உடைந்து விழும். பள்ளி கட்டிடத்தின் உறுதி தன்மையில் தங்களுக்கு பயமாக இருப்பதாகவும், அசம்பாவித சம்பவம் ஏற்பட்டபோதும் அது குறித்து பள்ளி நிர்வாகம் உரிய தகவல் அளிக்காமல் எப்படி மெத்தனமாக இருக்கலாம்.

இப்படி இருந்தால் தங்கள் பிள்ளைகளின் நிலை என்ன ஆகும் என்றும் கேள்விகளை எழுப்பினர். இதையடுத்து, பள்ளியின் தாளாளர் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார். ஆனாலும் மாணவர்களின் பெற்றோர் பலர் விடாமல் தொடர்ந்து கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மாங்காடு போலீசார் மேலும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பள்ளியில் சம்பவம் நடந்த இடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் பள்ளியின் மேற்கூரை பூச்சுகள் விழுந்த வகுப்பறையில் ஆய்வு செய்தனர். தற்போது பள்ளி நிர்வாகம் மேற்கூரை பூச்சு விழுந்த பகுதியை சிமென்ட் வைத்து பூசும் வேலைகள் செய்தது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கையில், பள்ளியின் மேற்கூரையின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததில், 5 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் அழைத்து பேசிய நிலையில், சிலர் தவறான தகவல்களை பரப்பியதால் இந்த சாலை மறியல் போராட்டம் நடந்ததாகவும், பள்ளியின் தரம் குறித்த சான்றுகள் அனைத்தும் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தனர். இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். பெற்றோரின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் கோவூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post தனியார் பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 5 மாணவர்கள் காயம்: பெற்றோர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Govur ,Kunradathur ,LKG ,Dinakaran ,
× RELATED இன்ஜினியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை