புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
மக்களவையில் கலாச்சார துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘‘வன விலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972 அட்டவணை -1ல் விலங்குகள் பட்டியலில் தேசிய விலங்கான புலி மற்றும் தேசிய பறவை மயில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேட்டையாடுவதில் இருந்து அவற்றுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. 2006ம் ஆண்டு புலிகளின் எண்ணிக்கை 1411ஆக இருந்தது. இது 2022ம் ஆண்டு 3682ஆக உயர்ந்துள்ளது” என்றார்.
நினைவு சின்ன டிக்கெட் விற்பனை ரூ.252 கோடி
மக்களவையில் அமைச்சர் கிஷன்ரெட்டி எழுத்து மூலம் அளித்த பதிலில், 2020-2021ம் நிதியாண்டில் ஒன்றிய அரசினால் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்களை பார்வையிடுதற்காக விற்பனை செய்த டிக்கெட் மூலமாக ஈட்டிய மொத்த வருவாய் ரூ.48.30கோடிய இருந்தது. இது 2021-2022ம் ஆண்டில் ரூ.101.50கோடியாக உயர்ந்துள்ளது. 2022-2023ம் ஆண்டு டிக்கெட் விற்பனை மூலமாக மொத்த வருவாய் ரூ.252.85கோடியா கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பசு தேசிய விலங்கு?
மக்களவையில் அஜ்மீர் மக்களவை தொகுதி பாஜ எம்பியான பகீரத் சவுத்ரி, ஒன்றிய கலாசார துறை அமைச்சகத்திடம், இந்திய கலாசாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியான பசுவை தேசிய விலங்காக அங்கீகரிப்பதற்கு அரசு விரும்புகிறதா? என்று எழுத்து மூலமாக கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால் இதற்கு அமைச்சர் கிஷன் ரெட்டி நேரடியாக எந்த பதிலையும் வழங்கவில்லை.
13,371 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது
மக்களவையில் ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்து மூலமாக அளித்த பதிலில், “ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் ஆகஸ்ட் 3ம் தேதி வரை கடந்த 10 மாதங்களில் மொத்தம் 13371 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
3லட்சம் ஹெக்டேர் வன நிலம் மாற்றம்
மக்களவையில் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புபேந்திர் யாதவ் கூறுகையில்,“அரசு தரவுகளின் படி கடந்த 15 ஆண்டுகளில் 3லட்சம் ஹெக்டர் வன நிலமானது, வனம் அல்லாத பயன்பாட்டுக்காக மாற்றப்பட்டுள்ளது. 2008-2009ம் ஆண்டு முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகபட்சமாக பஞ்சாபில் 61,318ஹெக்டேர் வன நிலம் மாற்றப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 514 ஹெக்டோர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
The post நாடாளுமன்ற துளிகள் appeared first on Dinakaran.
