×

உள்ளூர் பொருட்களையே வாங்குங்கள்: தேசிய கைத்தறி தின விழாவில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று நடந்த தேசிய கைத்தறி தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்தியாவை வளர்ந்த நாடாக வளர்ச்சி அடைய அடையச் செய்வதற்கு சிலர் தடைக்கற்களை உருவாக்க பார்க்கிறார்கள். ஆனால் தேசம் இன்று ஒன்றுபட்டு ஒரே குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஊழல், வாரிசு அரசியல், திருப்திபடுத்தும் அரசியல் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமென ஒரே குரலை எழுப்புகின்றனர். எனவே தீமைகளை வென்று நாடு வெற்றி பெறும், மக்களும் வெற்றி பெறுவார்கள் என நம்புகிறேன். கைத்தறி, காதி மற்றும் ஜவுளித் துறையை உலக சாம்பியனாக்குவதே பாஜ அரசின் முயற்சி. இன்றைய இந்தியா உள்ளூர் பொருட்களுக்கு குரல் மட்டும் கொடுக்கவில்லை, அதை உலகிற்கு எடுத்துச் செல்ல உலகளாவிய தளத்தையும் வழங்குகிறது.

இனிவரும் ரக்ஷா பந்தன், விநாயகர் சதுர்த்தி, தசரா மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது மக்கள் உள்ளூர் தயாரிப்பு பொருட்களை அதிகளவில் வாங்கி ஊக்கப்படுத்த வேண்டும்’’ என்றார். முன்னதாக அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள சூரஜ்கண்ட்டில் ‘அரியானா ஷேத்ரியா பஞ்சாயத்து ராஜ் பரிஷத்’ எனும் பாஜவின் 2 நாள் பயிலரங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியின் போது பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை வலுப்படுத்த உறுதியான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. கிராமங்களில் பஞ்சாயத்து ராஜ் முறையை அமல்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை சுதந்திரத்திற்குப்பிறகு 40 ஆண்டுகளாக காங்கிரசால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதன்பிறகு நிறுவப்பட்ட ஜில்லா பஞ்சாயத்து அமைப்பையும் அவர்கள் முறைப்படுத்தாமல் விட்டுவிட்டனர். இதன் விளைவாக, கிராமங்களில் வசிக்கும் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் சாலை, மின்சாரம், தண்ணீர், வங்கி, வீடுகள் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் ஏங்கும் நிலை ஏற்பட்டது. நாட்டில் உள்ள சுமார் 18,000 கிராமங்களுக்கு இன்னமும் மின்சாரம் கிடைக்கவில்லை. இன்று வளர்ந்த இந்தியாவுக்கான பாதை 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு நகரங்கள் வழியாகவும், நவீனமயமாகி வரும் கிராமங்கள் வழியாகவும் செல்கிறது. வளர்ந்த இந்தியாவின் இலக்கை அடையவும், அமிர்த காலத்தின் லட்சியங்களை நிறைவேற்றவும் இன்று நாடு ஒற்றுமையாக முன்னேறி வருகிறது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

The post உள்ளூர் பொருட்களையே வாங்குங்கள்: தேசிய கைத்தறி தின விழாவில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,National Handloom Day ,New Delhi ,Bharat Mandapam ,Delhi ,Pragati Maidan ,Dinakaran ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?