×

இன்று 3வது டி20 போட்டி; தொடரை கைப்பற்ற வெ.இண்டீஸ் முனைப்பு.! இந்தியாவுக்கு நெருக்கடி

கயானா: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது டி20 போட்டி, புராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களை வென்ற நிலையில், டி20 தொடரில் தொடர்ச்சியாக 2 தோல்விகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளது. டிரினிடாடில் நடந்த முதல் டி20ல் 4 ரன் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ், நேற்று முன்தினம் கயானாவில் நடந்த 2வது டி20 போட்டியிலும் 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது.

அந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. இளம் வீரர் திலக் வர்மா அதிகபட்சமாக 51 ரன் எடுத்தார். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 18.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து வென்றது. அதிரடியாக விளையாடிய நிகோலஸ் பூரன் 67 ரன் (40 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ரோவ்மன் பாவெல் 21, ஷிம்ரோன் ஹெட்மயர் 22 ரன், அகீல் உசேன் 16*, அல்ஜாரி ஜோசப் 10* ரன் எடுத்து வெற்றிக்கு உதவினர். பூரன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், வெஸ்ட் இண்டீஸ் 2-0 என முன்னிலை வகிக்க 3வது போட்டி இன்று நடைபெறுகிறது. ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முனைப்புடன் உள்ளனர். தொடர்ச்சியாக கிடைத்த 2 வெற்றி, அந்த அணி வீரர்களின் தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்து உற்சாகம் அளித்துள்ளது.

எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஒன்றில் வென்றாலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றி விடும் என்பதால், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கில், சூரியகுமார், சாம்சன் ஆகியோர் கணிசமாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இஷான், திலக் வர்மா, ஹர்திக் ஓரளவு தாக்குப்பிடித்தாலும், பெரிய ஸ்கோர் அடித்தால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் சவாலை சமாளிக்க முடியும். தொடரை கைப்பற்ற வெஸ்ட் இண்டீசும், வாய்ப்பை தக்கவைக்க இந்தியாவும் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

The post இன்று 3வது டி20 போட்டி; தொடரை கைப்பற்ற வெ.இண்டீஸ் முனைப்பு.! இந்தியாவுக்கு நெருக்கடி appeared first on Dinakaran.

Tags : 3rd T20 ,West Indies ,Crisis ,India ,Guyana ,Providence Stadium ,T20 ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...