
சன்ரைசர்ஸ் பயிற்சியாளர்
ஐபிஎல் டி20 தொடரில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் நட்சத்திரம் டேனியல் வெட்டோரி (44 வயது) நிமியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக (2014-18) இருந்துள்ளதுடன், தற்போதையை ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் அணியில் பிரையன் லாராவுக்கு பதிலாக வெட்டோரி பொறுப்பேற்கிறார்.
இங்கிலாந்து தகுதி
மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் நேற்று நடந்த ‘ரவுண்ட் ஆப் 16’ ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தியது. இங்கிலாந்து – நைஜீரியா அணிகளிடையே நடந்த மற்றொரு போட்டி 0-0 என டிராவில் முடிந்ததை அடுத்து பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் இங்கிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதிக்கு முந்தைய ‘ரவுண்ட் ஆப் 16’ சுற்று இன்றுடன் நிறைவடைகிறது. 2 நாள் ஓய்வுக்குப் பிறகு காலிறுதி ஆட்டங்கள் ஆக.11, 12ல் நடக்க உள்ளன.
சர்வதேச செஸ் இனியன் சாம்பியன்
பிரான்ஸின் பார்டியூஸ் நகரில் நடந்த கிரேயோன் ஓபன் 2023 சர்வதேச செஸ் போட்டியில் (ஜூலை 31 – ஆக. 6), இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் சாம்பியன் பட்டம் வென்றார். இதில் 9 நாடுகளை சார்ந்த 113 சர்வதேச வீரர்கள் பங்கேற்றனர். 9 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 6 வெற்றி, 3 டிரா என 7.5 புள்ளிகளுடன் இனியன் முதலிடம் பிடித்தார். மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டர் பரத் சுப்ரமணியம் 2ம் இடமும், பிரான்ஸ் வீரர் கேரல் ஜோசப் 3ம் இடமும் பிடித்தனர்.
மீண்டும் இன்சமாம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் (53 வயது) 2வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, 2016-19 வரை அவர் இந்த பொறுப்பை வகித்துள்ளார். அணி இயக்குனர் மிக்கி ஆர்தர், தலைமை பயிற்சியாளர் கிரான்ட் பிராட்பர்ன், செயலர் ஹசன் சீமா ஆகியோரும் தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.