×

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

எம்பெருமாட்டி

“பெரு” – பெரிய என்ற சொல் ஆன்மாவை குறிக்கும். இன்றும், உலக வழக்கில் பெரிய காரியம் ஒன்று நடந்துவிட்டது என்ற சொல்லால், இறப்பைச் சூட்டுகிற வழக்குண்டு. நேரடியாக இறப்பை சூட்டாமல் மங்கள வழக்கு அல்லது அவைஅல் கிளவி என்பதைக் கொண்டே உணரலாம். “மாட்டி” என்பது ஒரு இனத்தின் தலைவியை குறித்தது “பெருமாட்டி” என்று குருவின் மனைவியையும், சீமாட்டி என்று அரசரின் மனைவியையும் குறிப்பிடும் வழக்கும் உண்டு. பிராட்டி “பெருமாட்டி” என்ற இரண்டு சொல்லும், இலக்குமி என்ற ஒரே தெய்வத்தைக் குறித்தது. அந்த வகையில், அபிராமி பட்டர் “எம்பெருமாட்டி” என்ற இச்சொல்லை உமையம்மையை குறிப்பிடப் பயன்படுத்துகிறார்.

“எம்” என்ற வார்த்தையால், அபிராமிபட்டர் ஆத்மார்த்த மூர்த்தி என்று வீட்டில் வைத்து வணங்கும் சக்ரம் அல்லது ராஜேஸ்வரி சந்திரமௌலீஸ்வரர் இவர்களைத் தமிழில் “எம்பிராட்டி” என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்.“எம்பிராட்டி” என்பதால் உமையம்மை அரிசியாக திகழும் திருக்கோலத்தை குறிப்பிடுகின்றார். இதை சஹஸ்ரநாமம் ‘ஸ்ரீமஹாராஜ்ஞீ’ என்பதால் உணரலாம். ‘ஸ்ரீ’ என்பது இலக்குமியையும், ‘மஹா’ என்பது சரஸ்வதியும், ‘ராஜ்ஞீ’ என்பது ராஜேஸ்வரியையும் குறிக்கும்.

இவர்கள் மூவரும் சேர்ந்த வடிவத்தை “எம்பெருமாட்டி” என்கின்றார். ‘ஸசாமர ரமா வாணீ ஸவ்ய தக்ஷிணஸேவிதா’ என்பதாலும் நன்கு அறியலாம். ஆத்மார்த்த மூர்த்தி, ராஜேஸ்வரி, அபிராமி, பிரம்மவித்யாம்பிகா என்ற திருவெண்காட்டிலுள்ள உமையம்மை என்ற அனைத்து தெய்வத்தையும் மனதில்கொண்டே “எம்பெரு மாட்டி” என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்.

தன் பேரழகே

என்ற வார்த்தையால் உமையம்மைக்கு இயல்பாக உள்ள அழகைக் குறிப்பிடுகிறார். அவளது உருவ அழகு அது யாரையும் ஒத்தது அல்ல. அதே சமயத்தில், அது மாறுபடாமல் மேலும் மேலும் வளருமே அன்றி, சலிக்காது. அத்தகைய அழகையே இங்கு அழகு என்கின்றார். `அழகுக் கொருவரும் ஒவ்வாத வல்லி’ (71) என்பதால் அறியலாம். உலகியலில் அனைவரும் அணிகலன்களை அணிந்து கொள்வதனால் அழகு பெறுகிறார்கள். ஆனால், உமையம்மையை பொறுத்தவரை, அவள் அணிந்துகொள்வதால் அந்த அணிகலனானது அழகு பெறும். இதை அபிராமிபட்டர், ‘அணியும் அணிக்கழகே’ (24) என்கிறார். உலகியலில் அழகு என்பது ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மாதிரி அமையும். உதாரணத்திற்கு, மயிலுக்குத் தோகையும், மனிதனுக்கு அறிவும் போல உமையம்மை ஒரு தனிஅழகைப் பெற்றவள் அல்ல.

அழகு, அனைத்திற்கும் அழகானவள். அதனால்தான், அழகி எனப் பொருள்படும் `சுந்தரி’ (8) என்று அபிராமிபட்டர் கூறுகின்றார். சுந்தரியால் இவ்வுலகம் முழுவதும் அழகு பெறுகிறது என்கின்றார். இதையே வேதம் `சத்யம், சிவம், சுந்தரம்’ என்கிறது. “தன் பேரழகே” என்பதனால் திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மையை, மற்ற கோயில்களில் உள்ள உமையம்மையிலிருந்து வேறுபடுத்தி காட்டத்தான் “தன்” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். இருத்தல் இயல்புடன் அறிவு, ஆற்றல், செல்வம், புகழ், நன்மை, இறவாமை இவை அனைத்தும் சுந்தரம் என்ற ஒரே சொல்லாலேயே குறிப்பிடப்படுகிறது. இந்த அத்தனை கருத்துக்களையும் மனதில் கொண்டே “தன் பேரழகே” என்கிறார்.

அந்தமாக

“கண்களிக் கும்படி” என்பதனால் தியானத்தின் வழி உமையம்மையை வழிபாடு செய்வதையும்,
“கண்டு கொண்டேன்” என்பதால், தியானத்தின் அனுபவத்தையும்,
“கடம்பாடவியில்” என்பதனால் இறைவியின் இருப்பிடத்தையும்,
“பண்களிக் கும்குரல் வீணையும் கையும்
பயோதரமும்” என்பதால் மாதங்கி, சரஸ்வதி, காளி என்ற தேவதைகளின் தியானத்தையும்,
“மண்களிக் கும்பச்சை வண்ணமும் ஆகி”

என்பதால் பூமாதேவியையும்,

“மதங்கர் குலப்பெண்களில் தோன்றிய” என்பதனால் மதங்க முனிவரின் மகளாகவும்.

“எம்பெருமாட்டி” என்பதனால் அவளே பரமனின் மனைவியாகிய போது பிரம்ம வித்யாம்பிகையாகவும்,
“தன் பேரழகே” என்பதால் தனக்குக் காட்சி கொடுத்த இத்தனை கோலங்களையும் சேர்த்து “பேரழகே” என்கின்றார். அந்த சுந்தரியைத் தொழுவோம்.

அழகுக் கொருவரும் ஒவ்வாத வல்லி, அருமறைகள்
பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள் பனிமாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றநெஞ்சே! இரங்கேல் உனக்கென் குறையே
எழுபத்தி ஒன்றாவது அந்தாதி

ஆதியாக

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையை வளமுடனும், நலமுடனும் வாழவே விரும்புகிறான். அதற்காக பல வழிகளை நாடுகிறான். அதில் ஒன்றுதான் உமையம்மையின் வழிபாடு அந்த வழிபாட்டை செய்யும் முறையை செம்மையுற கூறுகிறது சாக்த சாத்திரம். அச்சாஸ்திரத்தின் வழி சொல்லப் பட்டவையே இப்பாடலில் அபிராமி பட்டர் கூறுகிறார். இப்பாடலை முழுமையாக பொருள் புரிந்து அவர் கூறிய வழியை பின்பற்றி உமையம்மையின் அருளைப் பெறுவோம். இனி பாடலுக்குள் நுழைவோம்.

அந்தாதி பொருட்சொல் வரிசை
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி
அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம் புயத்தாள்
பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே
இரங்கேல் உனக்கென் குறையே
இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கதை இனி காண்போம்.
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி

“அழகு” என்ற சொல்லிற்கு ஒன்பது பொருளை அகராதி கூறுகிறது. அந்த ஒன்பது பொருளையும் அபிராமிபட்டர் இந்த சொல்லில் பயன்படுத்தியுள்ளார். அந்த ஒன்பதையும் காண்பது என்பது பாடலின் பொருளைப் புரிவதற்கு துணையாய் அமையும். இந்த சொல்லின் செறிவை நாம் உணர்ந்து கொள்ள முயல்வோம். ஒவ்வொன்றாய் இனி காண்போம்.

“அழகு” என்பது குறைதலும், மிகுதலும் இல்லாமல் உடல் உறுப்புகள் நிறம், அளவு, பருமன் இவையாவும் சிறப்பாக அமைந்திருப்பது, அந்த வகையில் சிற்ப சாத்திரம் உமையம்மையின் திருமேனியை உத்தம தசதாள லட்சணம் என்று சொல்லக்கூடிய மிகவும் நுண்ணிய அளவுகளை பயன்படுத்தி சிறப்பாக அமைக்க வேண்டும் என்கிறது, சாமுத்திரிகா லட்சணத்தில் குறிப்பிட்டுள்ள படி ஒரு சிறிதும் குறைவில்லாமல் அமைத்தல் வேண்டும். அப்படி அமைப்பது என்பது மானுடர் விரும்பும். அனைத்து பலன்களையும் தரவல்லது. அதனால்தான், திருமேனியின் அளவுகள் கூடி குறைவாக இருந்தாலோ, இடம் மாறி திருவுருவை பிரதிஷ்டை செய்தாலோ, உறுப்புகள் சிதைந்தாலோ அது பூஜைக்கு ஏற்றதல்ல என்கிறது சிற்பசாத்திரம்.

நவநீதி லேபனம், தான்யவாசம் என்ற பூசனை முறையால் இதை பரிசோதிப்பது. சாமுத்திரிகா லட்சணத்துடன் எவ்வித குறைவும் இன்றி செவ்வனே அமைய பெற்றது. திருக்கடையூரில் அமைந்துள்ள அபிராமியின் திருமேனி. அதை சூட்டவே “அழகே’’ என்கிறார்.“அழகு” என்ற சொல்லிற்கு சர்க்கரை என்றும் ஒரு பொருள். கல்கண்டு, நாட்டுச் சர்க்கரை இவைகள் எல்லாம் சிவாகமங்களில் சொல்லப்பட்ட பொருள்களாகும். இதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அதிதேவதை உண்டு. இதை, `அநுக்ஞா’ என்ற பூஜையில் தெளிவாக அறியலாம். அதில் தேங்காயில் ருத்ரனும், வாழைப்பழத்தில் கணபதியும் இருப்பதைப் போல், கரும்பில் உமையம்மையும், கற்கண்டில் மன்மதனும், நாட்டுச் சர்க்கரையில் காமேஸ்வரனும் இருப்பதாக பத்ததி நூல்கள் குறிப்பிடுகின்றது. சூரிய பூஜையில், கரும்பு பயன்படுத்தப்படுகிறது.

இது அத்தனையும் மனதில் கொண்டு உமையம்மையை வணங்குவர். இந்த வழிபாட்டில் குழந்தைப் பாக்கியமும், கணவன் மனைவியிடத்து ஒற்றுமையையும் ஏற்படும் என்கிறது ஆகமம். சர்க்கரைப் பொங்கல் குறித்தும், `குடான்ன ப்ரீத மானஸா’ என்கிறது சஹஸ்ரநாமம். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்தால், உமையம்மையின் மனதில் இடம்பெறலாம்.

இதை `பாலினும் சொல் இனியாய்’ (60), `கரும்பும் மலரும்’ (62), `பாகையும் போலும்’ (86) என்ற வார்த்தையால் அறியலாம். நூல் இன்பத்தழகு அபிராமிபட்டர், தான் அமைத்த அந்தாதியில் சொல்லும் பொருளுமாக உமையம்மையையும், ஈஸ்வரனையும் `கணபதியே நிற்கக் கட்டுரையே’ (காப்பு) என்றும், சீர் அபிராமி அந்தாதி என்றும், ‘பண்ணளிக்கும் சொல்’ (15) என்றும் அந்த பாடலை இயற்றுவதற்கு உறுதுணையாய் நின்ற நூலிற்கு அழகாகிய

சுருங்கச் சொல்லல்
விளங்க வைத்தல்
நவின்றோர்க்கு இனிமை
நன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை
ஆழமுடைத்தாதல்
முறையின் வைப்பு,
உலகம் மலையாமை,
விழுமியது பயத்தல்
விளங்கு உதாரணத்து ஆகுதல்,

இவைகள் அமைய வேண்டுவதிலிருந்து “அழகு” என்ற சொல்லினால் நூலழகையும் கூறுகிறார். “அழகு” என்ற சொல் மனிதன் அடைய வேண்டிய வாழ்க்கைக்கு இன்றியமையாத பதினாறு செல்வங்களுள் ஒன்றாக இருப்பது அழகு. உமையம்மையால் கொடுக்கப்படும் இந்த அழகு, வேறு யாராலும் கொடுக்க இயலாது. அதை அளிக்கும் உமையம்மையே அழகு என்கிறார். இதையே `அழகு புகழ் சந்தானம்’ என்ற பதிக வரியால் உணரலாம். “அழகு” என்ற சொல்லிற்கு இளமை என்று பொருள். உமையம்மையானவள் மூப்பற்றவள், `வயோவஸ்தா விவர்ஜிதா’ என்கிறது சஹஸ்ரநாமம்.

மேலும், உமையம்மையின் தியானத்தில் `யவ்வனாரம்ப ரூடா’ இளமையின் துவக்கத்தில் உள்ளவள் என்ற பொருள்படும் வகையில் உமையம்மையை தியானித்தால் ஆரோக்கியம் தரும் ஊக்கமும் பெறலாம். அதனாலேயே “அழகு” என்ற வார்த்தையால் சிறப்பையும் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு தனிச் சிறப்புண்டு. உமையம்மைக்கு அனைத்து சிறப்புகளும் உண்டு. அதனால்தான், பேரழகே என்கிறார். இதையெல்லாம் கருத்தில் கொண்டே திருக்கடவூரில் எழுந்தருளியிருக் கூடிய அபிராமி அம்மைக்கு மட்டுமே அமைந்த சிறப்பை சூட்டுவதற்காகவே. அந்த அழகோடு ஒப்புமை சொல்லும் அளவு வேறு எந்த அழகும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியே “அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி’’ என்கிறார்.

மேலும், அழகானது ஆறுவகை என்கிறது சாத்திரம். அக அழகு, புற அழகு, அக அழகு குணத்தாலும், அறிவாலும் அமைவது, புற அழகு என்பது புகழால் அமைவது, உடல் அழகு, உள்ள அழகு, அறிவழகு, ஆன்ம அழகு, எண்ண அழகு, இறை அழகு இந்த அனைத்து அழகுமே ஒன்றாக பொருந்தியவள் உமையம்மை இதையே `சின்னஞ் சிறிய மருங்கனில்’ (53) உடல் அழகு, `அழியாத குணக்குன்றே’ (95) உள்ள அழகு, `என் அறிவாய்’ (11) அறிவழகு, `வெண் பகடூறும் பதம்’ (91) ஆன்ம அழகு, `சுந்தரி’ (8) தெய்வீக அழகு இதைக் கொண்டு நன்கு அறியலாம். இது அனைத்தையும் ஒருங்கிணைத்தே “அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி’’ என்கிறார்.

அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம் புயத்தாள்“அருமறைகள்” என்பதனால் வேத வைதீக, சாரத்தை பற்றிய தெளிவான அறிவையும், “பழகி’’ என்பதால் வேதத்தில் கூறிப்பட்டுள்ள ஆசார நெறிகளை பின்பற்றி பழகி, சிவந்த என்பதனால் தொடர்ந்து இடைவிடாமல் வேதத்தை அறிந்தும், சொல்லியும், சிந்தித்தும், அதையே ஆசாரமாக கடைப்பிடித்தும், தொடர்ந்து கடைப்பிடித்தால் தோன்றுகிற பழக்கமும், அந்தப் பழக்கத்தின் வழி உடல், உள்ளம், அறிவு, எண்ணம், ஆன்மாவில் தோன்றியே மாறுதல்களையே “சிவந்து’’ என்கிறார். “பாதாம் புயத்தால்’’ என்பதனால் இந்த செயலால் தோன்றுகிற அருள் சக்தியையே குறிப்பிடுகிறார்.

அருள் சக்தி என்பது உமையம்மையினுடைய கருத்துக்களை நாம் அறிதல், அந்த கருத்துக்களை பின்பற்றி நாம் செயல்படுதல், அப்படி செயல்பட்டதன் அடிப்படையில் அனுபவங்களை பெறுதல், அந்த அனுபவத்தின் வழி ஏற்பட்ட இறையனுபவம், இதைத்தான் “பாதாம் புயத்தாள்’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்.

“அருமறைகள் பழகிச் சிவந்தபாதாம் புயத்தாள்’’ என்பதை தனித்தனியே பிரித்து இனி காண்போம். “அருமறைகள்’’ என்பதை அருமை என என்றானது. இலக்கணத்தில் அருள் என்ற சொல்லின் கடைக் குறையே அருளானது. அரு என்பதனால் இறைவனே சொல்லிய மறைபொருளாகிய வேதம். “மறை” என்பது வேதத்தையும், ஆகமத்தையும், தந்திர சாத்திரங்களையும், மூல மந்திரங்களையும் குறிக்கும் சொல்.

அபிராமி பட்டர், அபிராமி பற்றிய விளக்கமாகச் சொல்லிய இந்த அந்தாதிக்கு பிராமண நூலாக எந்தெந்த நூல்களை, தான் கற்றேன் என்பதை அவர் வாயிலாகவே குறிப்பிடுகிறார். வேதமானது ரிக், யஜூர், சாம, அதர்வண என்ற நான்கு வேதங்களைக் கற்க உதவும். சிக்ஷா, வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிஷம், கல்பம் என்ற ஆறையும் இதில் சொல்லப்பட்டிருக்கிற செயல்பாட்டு நெறிகளை குறிப்பிடும், கிருஹ்ய சூத்திரம் ஆஸ் வலாயன, போதாயன போன்ற ஆறு சூத்திரங்களையும், அந்த ஆசாரங்களை விளக்கிக் கூறும் ஸ்மிருதிகளையும், அதன் வழி சடங்குகளையும், நன்கு அறிந்து உணர வேண்டும். இவையே அருமறைகள்.

இவை அனைத்தும் இறையருளால் செய்யப்பட்டவை இதை `சுருதிகளின் பணையும், கொழுந்தும், பதி கொண்ட வேரும்’ (2) என்ற மூன்று சொற்களாலும் குறிப்பிடுகின்றார். மேலும், ஆலயங்களில் பூசனை முறைகள், ஆலயங்களில் பணியாற்றும் தகுதி பெற்ற பணியாளர்கள் எடுத்துக் கொள்ளும் மந்திர தீட்சை, அந்த மந்திர தீட்சையை எடுத்துக் கொண்டவர்.

வீட்டில் கோயிலில் பின்பற்ற வேண்டிய பூஜா விதானம் [பூசனை முறை] ஜபவிதானம், ஹோம விதானம் [வேள்வி முறை] அனுஷ்டானம் [தினசரி பயிற்சி] யோகம், [மனதை தன் வயப்படுத்தல்] பிராணாயாமம் போன்ற யோகப் பயிற்சி, சரியா என்ற தினசரி ஒழுக்க முறைகள், கிரியா என்ற செயல்பாடுகள், யம நியமங்கள் என்ற கொள்ளத்தக்க தள்ளதக்க குணங்கள், ஞானம் என்ற உமையம்மையாள் அருளப்பட்ட ஆகமங்கள், பத்ததி நூல்கள், மந்திர கல்பங்கள் இவைகளை தெளிவுற அறிதல் என்ற செயல்முறை விளக்கக் கல்வி முறையையே “அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம் புயத்தாள்’’ என்கிறார்.

இதையே ‘பரமாகம’ (6) என்பதனால் ஆகமத்தையும், ‘பத்ததியே’ (6) என்பதனால் ஸ்ரீசக்ர பூஜா விதாத்தையும், `எவரும் அறியா மறையை’ (3) என்பதனால் சாத்திர நுட்பங்களையும், `அறிந்து கொண்டு செறிந்தேன்’ (3) என்பதனால்தான் கற்றதை செயல்படுத்திய ஆதாரத்தையும், `திருவே வெருவி’ (3) என்பதனால் யோகத்தால் உள்ளத்திற்குள் ஏற்படும் ஞான அனுபவத்தையும், ‘பிறிந்தேன்’ (3) என்பதனால் யம நியமங்களால் கொல்லாமை, பொய், களவு முதலிய பாவத்தை விலக்கியதையும், அஹிம்சா, புலன் அடக்கம், பிரம்மச்சரிய விரதம் போன்ற நல்ல பயிற்சிகளையும், ஒழுக்கங்களை பின்பற்றுவதையும் குறிப்பிடுகிறார்.

`வேதம் பழம் பழம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு’ (79) என்று வைதீக நெறி முறைகளையும், அவர் பின்பற்றினார் என்பதை “அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம் புயத்தாள்’’ என்கிறார். பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க“பனி’’ என்பதை குளிர்ச்சி பொருந்திய என்றும் “மாமதி’’ என்பதை நிலவின் நடுவில் ஒரு கரிய பகுதி தோன்றும். அது முயல் போன்று இருக்கும். அதனால் அதை சந்திரனையும், அதன் நிறத்தை ஒத்த முயலையும் இணைத்து ‘ஷஷாங்கன்’ என்று வடமொழியில் கூறுவர். `ஷஷகம்’ என்றால் முயல் என்று பொருள்.

ஷஷாங்கன் என்றால் சந்திரன் என்று பெயர். இதையே “பனிமாமதி” என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம். குளிர்ந்த முயல் போல் தோன்றும் சந்திரனின் இளம் பிறையை திருமுடியிலே தரித்து கொண்டு கொம்பு போன்று இருக்கக்கூடிய சிவபெருமானிடத்து பசுமை நிறத்தில் ஒளி பொருந்திய யாமளை என்ற உமையம்மையானவள் கொம்பிலே கொடி படர்வதை போல் சிவசக்தியாக இணைந்திருக்க கூடிய ஷியாமளா தண்டேஷ்வரர் என்ற வடிவத்தையே “பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பு’’ என்கிறார்.

இறைவனை, குறிப்பாக சிவபெருமானை [தேஜோமய, தண்டாகார] ஒலிப்பொருந்திய கொம்பு வடிவான என்ற பொருள்படும் வகையில் அவளது வடிவத்தை குறிப்பிடுவதையே அபிராமி பட்டர், சிவபெருமானை கொம்பு என்கிறார். கோமள யாமளை என்பதனால் சிவபெருமானை பற்றியிருக்கிற ஆலிலை வடிவில் அமைந்திருக்கிற விஷ்ணு பாகம் என்றும், சக்தி என்றும், பிண்டிகை என்றும் ஆகம கலைச் சொற்களால் கோயில்களில் அமைந்துள்ள சிவலிங்கத் திருமேனியை சுற்றியிருக்கிற ஆலிலை வடிவான உமையம்மையை கோமளாம்பிகை என்று அழைக்கின்றனர். கோயில்களில் இருக்கும் இந்த சிவலிங்கத் திருமேனியைத் தண்டு போன்ற பாகத்தையும், அதை சுற்றியிருக்கிற ஆலிலை போன்ற ஆவுடையாரையும் சேர்த்து இரண்டையும் தாங்கியிருக்கின்ற தாமரை போன்ற பிரம்ம பாகத்தை இணைத்து “கோமள யாமளைக் கொம்பு’’ இருக்க என்று குறிப்பிடுகிறார்.

சிவலிங்கத் திருமேனியை தியானம் செய்வது என்பது உமையம்மையை சிவன் இருவருக்கும் பிறந்த ஸ்கந்தரையும், தியானம் செய்வதற்கு சமமாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் என்ற மூன்று தேவதைகளையும் இணைத்து வணங்குவதற்கு ஒப்பாகும். இப்படிப்பட்ட உயர்ந்த தெய்வங்களை முதல் தேவர் மூவர் சிவசக்தி, அனைவரையும் தியானித்து உடல் வளம், உயிர் நலம், உள்ள செம்மை, அறிவு தெளிவு, ஆன்ம விடுதலை, அனைத்து நலன்களையும் பெறுவதையே “கோமள யாமளைக் கொம்பிருக்க” என்கிறார்.

பூசிக்க சிறந்த சிவலிங்கம் தியானிக்க சிறந்தது உமையம்மை ஜபிக்க சிறந்தது முதத்தேவர் இவை அனைத்தினும் சிறந்தது சிவலிங்க தியானம். மேலும், இந்த லிங்கங்கள் சாக்தம் பரம், சைவ பரம், பிரம்ம பரம், விஷ்ணு பரம், ருத்ர பரம் என்று ஐந்து விதங்கள் உள்ளது. இதில் சாத்த பரமான லிங்கத்தையே இங்கு அபிராமிபட்டர் குறிப்பிடுகிறார். இந்த சாத்த லிங்கத்தை திருமீயச்சூர் என்ற தலத்தில் பிராம்மி முதலான தேவியர்கள்.

வழிபாடு செய்ய அமைக்கப்பட்ட சக்தி லிங்கங்களை இன்றும் காணலாம். இதையே, `சக்தி தழைக்கும் சிவமும்’ (29) என்ற வார்த்தையால் அறியலாம். இந்த சக்தி லிங்கங்களை வழிபாடு செய்வது என்பது உடல் நலத்தையும், ஆரோக்யத்தையும் உலகின் செல்வமான பதினாறு பேற்றையும், அருள வல்லது சக்தியை திரு உருவம் அமைத்து வழிபடுவது என்பதைவிட லிங்க வடிவில் வழிபடுவது சிறப்பானது என்கிறது சாத்த ஆகமங்கள்.

இவ்வாறு வழிபாடு செய்தால் உபாசனை தடங்கள் நீக்கும் சாத்திர ஞானம் பெறுகும். தவறுகள் மன்னிக்கப்படும். சக்தி லிங்கத்தில் உமையம்மையின் வழிபாட்டில் பூசை தவறுகளுக்காக வறுந்த தேவையில்லை மாறாக குறைந்த நாட்களிலேயே சக்தியின் அருளைப் பெற்றுவிடுவர் என்கிறது பரமாகமம். அந்த தியானத்தையே, “பனிமா மதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க’’ என்கிறார்.

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி appeared first on Dinakaran.

Tags : Abhirami ,Valli ,
× RELATED அபிராமி அந்தாதி: அறிந்தேன் எவரும் அறியா மறையை!