×

ங போல் வளை… யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

மூவுடல் முழுமை கொள்தல்

நாம் ஒருவரை சந்திக்க செல்கிறோம் அல்லது அவர் வருகிறார், முதல் சந்திப்பிலேயே அவருக்கு நம்மை அல்லது நமக்கு அவரை பிடித்து விடுகிறது. அவருக்காக நாம் எதையும் செய்ய விரும்புகிறோம்.

அல்லது முதல் சந்திப்பிலேயே அவரை சுத்தமாக பிடிக்கவில்லை அவரை வெறுக்கிறோம், அதற்கான எந்த காரணமும் இப்போது தெரியவில்லை. இது மனிதர்கள் சார்ந்து மட்டுமில்லை, சில குறிப்பிட்ட, இடங்களின் மீது, பொருட்களின் மீது, சந்தர்ப்பங்களின் மீது என பலவாறாக நடக்கிறது. விருப்பு வெறுப்பு என்பது நம் மனதில் உள்ளது தானா? அது வேறு எப்படி எங்கே உருவானது? அதனால் நான் எவ்வகையிலேனும் பாதிக்கப்படுகிறேனா? என நம்மையே நாம் கேட்டுக்கொண்டால் நிச்சயமாக ஆம் என்பதே பதிலாக இருக்கும்.

அறிவியல் உளவியல் என எந்த இயலில் யோசித்தாலும் விருப்பு வெறுப்பு, பழக்கங்கள் ஒழுக்கங்கள் என அனைத்தும் உடல் மனம் என பல தளங்களில் நம்முள் பரவியிருந்து, மனம் செய்யும் ஒரு குறிப்பிட்ட செயலுக்கு உடலும், உடல் செய்யும் ஒரு எதிர்வினைக்கு மனமும், இவை இரண்டும் செய்யும் செயல்களுக்கு நமது அன்றாட மற்றும் நீண்டகால வாழ்வும் பாதிக்கப்படுகிறது என்பதை காணமுடியும்.

உதாரணமாக, இனிப்பு எனும் சுவையின் மீது மனம் கொள்ளும் விருப்பமும், அதை உடலில் தொடர்ந்து செலுத்துவதால் உடல் காட்டும் நோய் எனும் எதிர்வினையும் ,அந்த எதிர்வினையால் அன்றாட வாழ்வில் உண்டான பாதிப்பும், அது நீண்டகால அளவில் வாழ்வில் ஏற்படுத்தும் முடக்கமும் என ஒரு பட்டியல் நம்முன் நீள்கிறது.இதற்கு நாம் எதாவது செய்ய முடியுமா? என்பதை விட நவீன உளவியலும் மருத்துவமும் இதை கையாளுவதை போன்றே மரபார்ந்த துறைகள் எப்படி கையாள்கிறது என்பதையும் கவனிக்கலாம்.

இந்திய அறிவியல் அல்லது ஞானம் என்பது எப்போதும் ஒற்றைத்தன்மை கொண்டதாக இருக்காது, மற்ற மரபுகளில் ஒரு குறிப்பிட்ட கருத்தை பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் உள்வாங்கியே ஒரு ஒட்டுமொத்த பார்வையை முன்வைக்கும், அது ஆயுர்வேதம், தாந்த்ரீகம், விஷிஷ்டாத்வைதம், யோகம், என எந்த துறையாக இருந்தாலும் அனைத்தையும் இணைத்து பார்ப்பது இங்கே முக்கியமான ஒன்று.

ஆதி சங்கரர் எழுதிய தத்வபோதம் எனும் நூலில் இருந்து தான் யோகமரபு மூன்று உடல்கள் என்கிற கருத்தை பெற்றுக்கொண்டு மேலும் விரிவாக பேசி, நாம் மேலே கேட்ட கேள்விகளுக்கு பதில்களை முன்வைக்கிறது. அதில் நம் வாழ்வை, மூவுடல்கள் கொண்டு நடத்துகிறோம் என்று குறிப்பிடுகிறது. முதல் உடல் கண்ணுக்கு தெரியும் இந்த பூதவுடல். ஸ்தூல சரீரம், கண்ணுக்கு புலப்படாத அதேநேரத்தில் அனுபவித்துக்கொண்டிருக்கும் நுண்ணுடல் எனும் சூட்சும சரீரம். இறுதியாக நாம் இங்கே இவ்விதம் திகழ்வதற்கும், மேற்கொண்டு பயணிப்பதற்கும் காரணமான உடல் காரண சரீரம்.

முதலில், நீர், நெருப்பு, காற்று,ஆகாயம்,நிலம் என ஐந்து பருப்பொருட்களால் உருவான ஸ்தூல உடல் பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்து மாற்றம் அடைந்தபடியே இருக்கும் இதன் இயல்புகளில் முக்கியமானது சுகமும் துக்கமும். ஏனெனில் இது வளர்வதற்கு இணையாகவே தேயவும் அழியவும் செய்கிறது. அதை தடுத்து நிறுத்த எந்த உபகரணமும் இல்லை, மந்திர மாயம் எவற்றாலும் இந்த வளர்சிதை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவரமுடியாது என்பதால் ஆயுர்வேதம் ,யோகம் போன்ற மாற்று மருத்துவ முறைகள், இந்த ஸ்தூல சரீரத்தில் நிகழும் தேய்மானத்திற்கு இணையாகவே அந்தந்த வயதிற்கான ஆகச்சிறந்த ஆரோக்யத்தை, உடலின் சமநிலையை பேண, மருந்துகளையும், பயிற்சிகளையும் பரிந்துரைக்கின்றன.

நீங்கள் ஒரு நல்ல யோக பயிற்சி நிறுவனத்தை தேர்ந்தெடுத்தீர்கள் எனில் முதலில் உங்களுக்கு கற்றுத்தரப்படும் பயிற்சிகள் உங்களை உடலளவில் சமன்கொள்ள செய்வதாகவே அமையும். யோகமரபை பொறுத்தவரை உடல் நோய்மை அடைவதற்கும் ,சமநிலை தவறுவதற்கும் நமது அன்றாடவாழ்வும், உள்ளே இருக்கும் மனமும் , நுண்ணுடலுமே காரணம் என்பதால், அவற்றை சமன் செய்யும் பயிற்சிகளே முதலில் உங்களுக்கு வழங்கப்படும். ஆகவே அனைத்து யோகப்பள்ளிகளும் ஆசனங்களில் இருந்து துவங்குகிறது. பெரும்பாலும் இதையே யோகம் என்று நினைத்து வாழ்நாள் முழுவதும் இதை மட்டுமே செய்துகொண்டிருப்பவர்கள் அநேகம். ஆனால் மரபோ, ஸ்தூல உடல் அடுத்த இரண்டு உடல்களால் பின்னப்பட்டது, அவற்றிலும் சமநிலை கொள்வது ஒரு யோக
சாதகரின் கடமை என்கிறது.

அடுத்ததாக சூட்சும சரீரம் எனப்படும் நுண்ணுடல், சங்கரரின் கூற்றுப்படி இது ஐந்து உடல் இயக்க உறுப்புகள் , ஐந்து அறியும் புலன்கள், ஐந்து உயிராற்றல்கள், மற்றும் மனம்,புத்தி இவற்றுடன் சேர்ந்து பதினேழு நிலைகளாக வெளிப்படுகிறது. யோக மரபோ இன்னும் அணுகி ஆராய்கிறது, ஒரு நோய் என்பது உடலில் வெளிப்படும் வேதனை மட்டுமல்ல. அது நுண் வடிவில் மனம் , ஆழ்மனம் எனும் சித்தம், உயிராற்றல் எனும் பிராணன்கள் உணர்ச்சி கள், என இவை அனைத்தும் இணைந்தோ பிரிந்தோ நோய்க்கூறாக வடிவெடுத்து உடலில் வெளிப்படுகிறது அல்லது உள்ளேயே வளர்கிறது, முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது.

உதாரணமாக கேன்சர் எனும் புற்றுநோய், அல்லது பெரும்பாலான உளவியல் சிக்கல்கள் மற்றும் மனநோய்கள். சுவாமி நிரஞ்சனந்த சரஸ்வதி அவர்கள் பிராணமய மற்றும் மனோமய கோசத்திற்கான பயிற்சிகளே இந்த நூற்றாண்டிற்கான முதல்கட்ட தேவை என்கிறார். ஏனெனில் இன்றைய நோய்களில் எழுபது சதவிகிதம் உடலால் மனதிலும், மனதால் உடலிலும் உருவாகும் நோய்கள் தான். என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

மூன்றாவதாக காரண சரீரம் எனும் நாம் இங்கே இருப்பதற்கும் அடுத்து எங்கே செல்லவிருக்கிறோம் என்பதற்கும் விடையாக புதிராக எளிதில் அனுபவமாக உணர்ந்துவிட முடியாத கருத்தாக, ஆனால் மறுக்கவே முடியாத மறையம்சம் கொண்டதாக விளங்கும் அவ்வுடல்.யோக தத்துவத்தை பொறுத்தவரை அறிந்துகொள்ள முடியாததும், நாம் இதுவரை அள்ளி சேர்த்ததும் , தள்ளி விளக்கியதும், என பல்வேறு காரணிகள் இணைந்து பிரார்ரப்த கர்மம் எனப்படும் பல பிறவிகளாக நாம் கொண்டுவந்து சேர்த்த ஒரு கண்ணுக்கும் அறிவுக்கும் புலப்படாத உடல்.

எனினும் நம் செயல்களால் ,சமநிலைகளால் , தீவிர தன்மையால் , சாதனங்களால், இவ்வுடலை அறிந்துகொள்ளவும், மேற்கொண்டு பயணிக்கவும் முடியும். உதாரணமாக அறிபுலன்களில் கட்டுபாடின்மையால், அதிகமாக ஒன்றை நுகர்கிறோம். அப்படி நுண்ணுடலில் படிந்திருக்கும் பழக்கம் ஸ்தூல உடலில் நோயாக வெளிப்படுகிறது ஆகவே நுண்ணுடலைவிட நுண்மையான காரண உடலை ஒருவர் அறிந்து கொள்வதும் அங்கிருந்தே அனைத்திற்கும் விடை காண்பதும் முக்கியம் என்கிறது யோகம்.

எனவே யோகம் முதலில் துவங்குவது ஸ்தூல, சூட்சும உடல்களுக்கானது என்றாலும் ஒரு தீவிரமான சாதகனை மூன்று உடல்களிலும் சமநிலை கொள்ள செய்து இதுவரை காரண சரீரத்தில் பதிந்து வைத்துள்ளவற்றை அனுபவித்து முடிக்க தேவையான ஆற்றலையும், மேற்கொண்டு இம்மைக்கும் மறுமைக்குமான முழுமை கொள்தலையும், யோகம் வீடுபேறு என்கிறது. ஆகவே இவ்வுடலை ‘ தர்ம சாதனம்’ என்கிறது இந்திய மரபு. தர்ம என்பது இங்கே முழுமையான ஒரு நிலை என்றே கொள்ளலாம்.

இங்கே நமக்கு நிகழும் ஒவ்வொரு அனுபவமும் ஏற்கனவே நாம் போட்ட விதையின் வெளிப்பாடு என்பதால் அது இந்த மூவுடல் கருத்தின் வழியாக நம் வாழ்வில் நிகழ்கிறது, இப்படியான தாய் தந்தையர் ,குடும்பம் , நாடு, கல்வி , நட்பு , மனைவி மக்கள், வேண்டுமென நாம் ‘ காரண சரீரத்தில் ‘ எப்போதோ போட்ட விதை நமது வாழ்க்கை என கண்முன் நிற்கிறது கடந்த இருபது அல்லது பத்துவருடங்களுக்கு முன்னர் நாம் தெரிந்தோ தெரியாமலோ போட்டுவைத்த மனம் சார்ந்த ஒரு எதிர்மறை எண்ணம் ‘சூட்சுமமாக’ அவ்வுடலில் வளர்ந்து வந்து இன்று நமக்கு தூக்கமின்மை எனும் நோயாக ‘பதற்றம்’ பயம் ‘ கோபம் என ஏதோ ஒன்றாக நம்முள் ஊடுருவி தன்னை வெளிப்படுத்தியபடி இருக்கிறது.

ஒவ்வாத ஒரு உணவோ , ஆரோக்கியமற்ற ஒரு செயலோ , ஒழுக்கமின்மையோ , சோம்பேறித்தனமோ, நாம் தெரிந்தே செய்த பிழைகள் கண்ணுக்கு தெரியக்கூடிய ‘ஸ்தூல உடலில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.இதுவரை இருக்கும் இந்த நிலையை முடிந்தவரை படிப்படியாக சமன் செய்ய ஒருவர் முயலலாம் எனவும் நிச்சயமாகவே பெருமளவில் மாற்றங்களை கொண்டுவந்துவிட முடியும் எனவும் ஒவ்வொரு மரபும் ஒரு திட்டத்தை முன் வைக்கிறது. யோகம் அந்த வகையில் மிகச்சிறந்த பாடத்திட்டத்தை கொண்டுள்ளது.

இந்த பகுதியில் நாம் ஆனந்த மதீராசனம் எனும் பயிற்சியை காணலாம், உடல் சமநிலை மற்றும் உளச்சமநிலை என இரண்டையும் தரவல்ல இந்த பயிற்சியை ஐந்து நிமிடங்கள் காலையிலும் இரவிலும் செய்துவரலாம். வஜ்ராசனம் எனும் நிலையில் அமர்ந்து கைவிரல்களால் பாதத்தை மெல்லிதாக பிடித்த நிலையில் மூச்சை கவனிக்கலாம்.

The post ங போல் வளை… யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Bend ,Dr. ,Moodal Perfection ,Dinakaran ,
× RELATED அருமனை அருகே பழுதான மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்