×

ஆடி அஸ்வினியுடன் இன்று அதிகாலை திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை துவங்கியது: அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் குவிந்தனர்

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் இன்று அதிகாலை ஆடி அஸ்வினியுடன் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக துவங்கியது. இதையொட்டி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பல்வேறு காவடிகள் சுமந்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள் உஷாராவி, மோகன், சுரேஷ்பாபு, மு.நாகன், கோயில் அதிகாரிகள் செய்துள்ளனர். விழாவையொட்டி மலைக்கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி நகராட்சி சார்பில், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், தற்காலிக கழிப்பிடங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருத்தணிக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் தொற்றுநோய் பரவாமல் இருக்க கிருமி நாசினிகள் தொடர்ந்து தெளிக்கப்பட்டு வருகிறது. உடனுக்குடன் குப்பைகளை அகற்றவும் தேவையான நடவடிக்கைகளை நகர் மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவர் சாமிராஜ், நகராட்சி ஆணையர் அருள் ஆகியோர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ், உதவி பொறியாளர் ராஜேந்திரன், மின்வாரிய ஊழியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். தீயணைப்புத் துறையினர் நல்லாங்குளம், சரவண பொய்கை பகுதிகளில் பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தண்ணீரில் ரப்பர் படகுடன் தயார் நிலையில் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி. சிபாஸ் கல்யாண் தலைமையில் டிஎஸ்பி விக்னேஷ், தமிழ் மாறன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மலைக்கோயில், தற்காலிக பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பக்தர்கள் அதிகம் கூடுகின்ற பகுதிகளில் சுகாதாரத்துறையினர் தயாராக உள்ளனர்.

The post ஆடி அஸ்வினியுடன் இன்று அதிகாலை திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை துவங்கியது: அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Aadi Krittika ,Tiruthani Murugan temple ,Aadi Ashwini ,Arogara Kosha ,Thiruthani ,Thiruvallur District ,Adi ,Krittikai ,Adi Ashwini ,Arokara Kosha ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை...