×

ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி: I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

டெல்லி: ராகுல் காந்தியின் எம்.பி பதவி நீக்கத்தை மக்களவை செயலகம் ரத்து செய்துள்ளது. இதை அடுத்து நாடாளுமன்றத்திற்கு வந்த ராகுல்காந்தி மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்றார். ராகுல்காந்தியின் தகுதி நீக்க உத்தரவை திரும்ப பெறுவதாக மக்களவை செயலகம் இன்று காலை அறிவித்தது. இதன் மூலம் ராகுல்காந்திக்கு மீண்டும் வயநாடு தொகுதி எம்.பி பதவி கிடைத்துள்ளதை அடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அவர் வந்தார். ராகுலை வரவேற்பதற்க்காக நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில் முன்பு திரண்டிருந்த I.N.D.I.A. கூட்டணி கட்சி எம்.பி க்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பின்னர் ராகுலுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பி உற்சாகத்தில் திகைத்தனர். நாடாளுமன்றத்திற்கு வந்த ராகுல் காந்திக்கு I.N.D.I.A. கூட்டணி கட்சி எம்.பி.கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மாகாந்தி சிலையை வணங்கிவிட்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த ராகுல்காந்தி மக்களவை நடவடிக்கைகளில் வழக்கம் போல் பங்கேற்றார். முன்னதாக மோடி பேர் குறித்து அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து கடந்த மார்ச் மாதம் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த குஜராத் நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. தகுதி நீக்கத்தை ரத்து செய்து ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவி தொடர நடவடிக்கை எடுக்கக்கோரி மக்களவை செயலகத்திற்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. தண்டனை விதித்த 26 மணி நேரத்தில் எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தண்டனையை நிறுத்தி வைத்து 3 நாட்கள் ஆகியும் பதவியை திரும்ப அளிக்க தாமதம் ஏன்? என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

இதை அடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பையும், காங்கிரசின் கடிதத்தையும் ஆய்வு செய்த மக்களவை செயலகம் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து அவருக்கு மீண்டும் வயநாடு தொகுதி எம்.பி பதவி வழங்கியது. இதனால் 136 நாட்களுக்கு பிறகு ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி கிடைத்துள்ள நிலையில் அதனை I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். திமுக எம்.பி திருச்சி சிவா, மதிமுக பொது செயலாளர் வைகோ உள்ளிட்டோருக்கு எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார்.

ராகுல்காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி கிடைத்ததை அடுத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒன்று திரண்டு கொண்டாடினர். அப்போது இனிப்பு வழங்கியும் நடனமாடியும் உற்சாகத்தில் திகைத்தனர். இதனிடையே தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில் உள்ள சுய விவர குறிப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் என ராகுல் காந்தி மீண்டும் குறிப்பிட்டுள்ளார். மக்களவையில் நாளை நடைபெறும் ஒன்றிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான தீர்மானத்தில் அவர் பங்கேற்கிறார். மேலும் 128 நாட்களுக்கு பிறகு ராகுல் காந்திக்கு மீண்டும் அரசு பங்களா கிடைக்கவுள்ளது.

The post ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி: I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,INDIA ,Delhi ,Lok Sabha Secretariat ,Parliament ,
× RELATED மனித பிறவியே இல்லை என்பதா?...