×

பெண்ணை காப்பாற்ற முயன்ற ஆட்டோ டிரைவர் படுகொலை: வாலிபர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பெண்ணை கத்தியால் குத்த முயன்றதை தடுத்த ஆட்டோ டிரைவர் சரமாரி குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியைச் சேர்ந்தவர் கிரண்குமார்(50), இவரது மனைவி துர்கேஸ்வரி (44). இவரது சகோதரி அருள்மொழி. இவர் தனது கணவர் முருகனுடன் வெளியூரில் வசித்து வருகிறார். இவர்களது மகள்களான தேவிஸ்ரீ(28), பவித்ரா(18) ஆகிய இருவரும் துர்கேஸ்வரியின் வீட்டில் வசிக்கின்றனர்.

ஆதியூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் சண்முகம்(22). இவர் கஞ்சா ேபாதையில் தேவிஸ்ரீ, பவித்ரா ஆகியோரிடம் அடிக்கடி தகராறு செய்வாராம். இதுகுறித்து தேவிஸ்ரீ, பவித்ரா இருவரும் தங்களது பெரியம்மா துர்கேஸ்வரியிடம் கூறியுள்ளனர். அவர் சண்முகத்தை கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்துள்ளது. ஆனால் சண்முகம், கஞ்சா போதையில் துர்கேஸ்வரி வீட்டு முன் நின்றுகொண்டு அடிக்கடி தகராறு செய்வாராம்.

அதேபோல் நேற்றும் சண்முகம் துர்கேஸ்வரி, தேவிஸ்ரீ, பவித்ரா ஆகியோரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சண்முகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து துர்கேஸ்வரியை குத்த முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் வல்லரசு(22) என்பவர் சண்முகத்தை தடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சண்முகம், வல்லரசுவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த வல்லரசு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசில் துர்கேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வல்லரசுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ண்ணை காப்பாற்ற முயன்ற ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post பெண்ணை காப்பாற்ற முயன்ற ஆட்டோ டிரைவர் படுகொலை: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Dinakaran ,
× RELATED ஜோலார்பேட்டை அருகே எரிகல் விழுந்த பகுதியில் செல்பி எடுக்க திரளும் மக்கள்