டெல்லி: எம்.பி. பதவி மீண்டும் வழங்கப்பட்ட நிலையில் மக்களவை கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து கடந்த மார்ச்சில் ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்பை கடந்தவாரம் உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியை திரும்பப்பெற்றார்.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதிநீக்கத்தை ரத்துசெய்து அறிவிப்பு வெளியானது. ராகுல் காந்தி வயநாடு எம்.பி.யாக தொடர்வார் என்று மக்களவை செயலகம் அறிவித்தது. இந்நிலையில், மக்களவை கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்த ராகுல் காந்தியை காங்கிரஸ் உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வரவேற்பு அளித்தனர்.
முன்னேறுகிறார் ராகுல் காந்தி என்று முழக்கமிட்டு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வரவேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை வணங்கிவிட்டு நாடாளுமன்றத்துக்குள் ராகுல்காந்தி நுழைந்தார். தனது டிவிட்டரின் முகப்பு பக்கத்தில் உள்ள சுய விவரக் குறிப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் என ராகுல் காந்தி மீண்டும் குறிப்பிட்டுள்ளார். மக்களவையில் நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
மக்களவை மீண்டும் முடங்கியது:
மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் தர வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். மக்களவை நடவடிக்கையில் ராகுல் காந்தி மீண்டும் பங்கேற்ற நிலையில் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
The post மக்களவை கூட்டத்தொடரில் பங்கேற்றார் ராகுல் காந்தி: I.N.D.I.A. கூட்டணி எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு..!! appeared first on Dinakaran.