×

மாஜி மந்திரியின் வாரிசை புறக்கணிக்கும் இலை நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வனத்துறை அலுவலகத்துல மலைபோல ‘பைல்’கள் ஏன் தேங்கி இருக்காம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாடு மாநில வன ஆராய்ச்சி மையத்தின் கீழ், சென்னையில் தலைமை அலுவலகமும், மதுரை, கோவை, திருச்சி, தர்மபுரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கோட்ட அளவிலான அலுவலகங்களும் இருக்குது. வனத்துறை கட்டுப்பாட்டுல இருக்குற இந்த மையத்துக்கு, பெண் அதிகாரி ஒருவர் தலைமை பொறுப்புல இருக்காருங்க. ஒரு வருஷமா பதவியில் இருக்கும் இவுங்க, பல்லுயிர் பரவல் திட்டம், திசு வளர்ப்பு திட்டம், தமிழ்நாடு புதுமை திட்டங்கள் என்று, முக்கிய திட்டங்களுக்கான செயல்குறிப்புகள் மற்றும் பல ஆராய்ச்சி பணிகளுக்கான திட்ட கோப்புகளில் கையெழுத்துப் போடாமல் இழுத்தடிக்கிறாங்களாம். இதனால், ஒவ்வொரு கோட்டங்களில் இருந்தும் கோப்புகள் அனுப்பப்பட்டு வனத்துறை தலைமை அலுவலகத்தில் அவை மலை மாதிரி தேங்கி இருக்காம். இதுதவிர இளநிலை ஆராய்ச்சியாளர் நியமனத்திலும் வனத்துறை வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்பட்டு, நியமனம் செய்து வர்றாராம்.. இதனால், வனத்துறை ஆராய்ச்சியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுவது கிடப்பில் இருப்பதாக வனத்துறையில் உள்ள கீழ் நிலை அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பாக பேசிக்கிறாங்க…’’
என்றார் விக்கியானந்தா.

‘‘வைத்தியின் வாரிசை யாரு புறக்கணிக்கிறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் மாஜி அமைச்சர் வைத்தியானவர் தற்போது தேனிக்காரர் அணியில் இருக்கிறார். இந்த அணியில் இணைந்த பின் நெற்களஞ்சிய மாவட்டத்திற்கு அவ்வப்போது வந்து, அரசியல் நிலவரம் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆலோசனை வழங்கி செல்வாராம். சமீபமாக, வைத்தியானவர் முக்கிய நிகழ்வுகளுக்குத்தான் வருகிறாராம். மற்ற அனைத்தையும் அவரது வாரிசு கவனித்து கொள்கிறாராம். வைத்தியானவர் சென்னையிலேயே இருக்குறாராம். இது வைத்தியின் ஆதரவு சீனியர்களுக்கு பிடிக்கவில்லையாம். இதனால் அடிக்கடி உரசல் ஏற்படுதாம். இருக்கும் கொஞ்ச, நஞ்ச நிர்வாகிகளையும் ைவத்தி தக்க வைப்பாரா இல்லை பிள்ளையால் அவர்களும் பழைய இடத்துக்கே போய்விடுவாங்களா என்பதை பொருத்து இருந்துதான் பார்க்கணும்னு வைத்தியின் ஆதரவாளர்கள் பேசிக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ரயில்வே அதிகாரிகளை அதிர வைத்த தாமரை கட்சிக்காரங்களை பற்றி சொல்லேன்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அம்ரித் பாரத் திட்டத்தில் ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்தும் பணிக்கான துவக்கவிழா நாடு முழுவதும் நேற்று நடந்துச்சாம். மாங்கனி நகர் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த அரசு விழாவில் தாமரை கட்சிக்காரங்களோட அட்ராசிட்டி தாங்கமுடியாத அளவிற்கு இருந்ததாம். நாட்டின் விஐபி துவக்கி வைக்கும் விழான்னு கேள்விப்பட்டதும், ரயில்வே ஸ்டேஷன் முன்பகுதி முழுவதும் அவங்க கட்சி கொடியை கட்டி, பேனர் வச்சிட்டாங்களாம். மக்கள் பிரதிநிதிகளை மட்டும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் அழைச்சிருந்த நிலையில், காலை 8 மணிக்கே தாமரை கட்சிக்காரங்க வந்து சீட்டை பிடிச்சிட்டாங்க. அதுவும் கட்சி மாவட்ட பொறுப்பில் இருக்கிறவங்க போட்ட சீட்டுகளில் தாமரை கட்சிக்காரங்க உட்கார்ந்துட்டு எழுந்திருக்க மறுத்துட்டாங்களாம். இலை கட்சி எம்பி, எம்எல்ஏவும் அந்த விழாவுக்கு வந்தாங்களாம். தாமரை கட்சிக்காரங்க பண்ணுன அட்ராசிட்டியை பார்த்துட்டு 10 நிமிஷத்துல அவங்க ஓட்டம் பிடிச்சிட்டாங்களாம். பங்ஷன் முடிந்து திண்ணையை காலி பண்ற வரைக்கும் ஒரே ஆட்டம்தானாம். இதை பார்த்த ரயில்வே அதிகாரிகளும், ஸ்டேஷனுக்கு வந்திருந்த பயணிகளும் டென்ஷனோடு விழா நடந்த இடத்தில் இருந்து நடையை கட்டினாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ மோசடி நிறுவனத்துல ஏமாந்த பணத்தை மக்களிடம் வசூலிக்கும் அதிகாரி யாரு…’’ என்று கேள்வி எழுப்பினார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல சத்தான ஏரியா விஏஓவாக திருப்பதி ஏழுமலையானின் பெயர் கொண்டவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் பட்டா மற்றும் நிலம் தொடர்பா மனுக்கள் கொடுத்தா நடவடிக்கை எடுப்பதில்லையாம். மாறாக இருதரப்பினரிடமும் தனித்தனியா பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை கறக்கிறாராம். பணம் இல்லை என்று சொன்னால் அந்த மனுவை கிடப்பில் போட்டு பாதுகாப்பாக வச்சிக்கிறாராம். ‘மோசடி நிதிநிறுவனத்துல பணத்த போட்டு பல லட்சம் ஏமாந்துட்டேன். அத இப்படிதான் சம்பாதிக்கணும்’ என சொல்லியே இந்த விஏஓ வசூல்வேட்டையில ஈடுபடுவதாக சக அலுவலர்களே பேசிக்கிறாங்க. இவர் ஏமாந்ததற்கு பொதுமக்கள் என்ன செய்வாங்க… அவர்களிடம் போய் ஒரு கையெழுத்துக்கு இவ்வளவு என்று பணம் வாங்குவது தப்பு இல்லையா என்று வருவாய் துறை அதிகாரிகளே பேசிக்கிறாங்க. இப்படியே கடந்த 6 மாசத்துக்கு மேல நில அளவீடு தொடர்பான பணிகளை முடிக்காம காலம் தாழ்த்தி வருகிறாராம். நிலம் அளவீடு தொடர்பா மேலதிகாரிங்க வந்தா கூட, சாக்குபோக்கு சொல்லி தட்டிக்கழிக்கிறாராம். இப்படி சத்தான பகுதியில் பட்டா கேட்டு வரும் விண்ணப்பங்களும், நிலம் தொடர்பான மனுக்களும் ஏழுமலையானின் பெயரை கொண்ட விஏஓவின் நடவடிக்கையின்றி மலைபோல குவிந்து வருதாம். பாவம் மனு கொடுத்தவங்க நம்ம பிரச்னை எப்போது தீரும்னு கவலையில இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post மாஜி மந்திரியின் வாரிசை புறக்கணிக்கும் இலை நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Maji ,wiki ,Department of the Wilderness Office ,Peter ,Tamil Nadu State Forest Research ,Yananda ,Dinakaran ,
× RELATED கேரள மாஜி அமைச்சரை விசாரிக்க மனு அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்