×

தமிழை தாழ்த்தி இந்தியை திணிக்க முயற்சிப்பதா?..அமித்ஷாவுக்கு ஜவாஹிருல்லா எம்எல்ஏ கண்டனம்

சென்னை: தமிழை தாழ்த்தி இந்தியை திணிக்க முயற்சிப்பதா என்று அமித்ஷாவுக்கு ஜவாஹிருல்லா எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: இந்தியா என்பது ஓர் ஒற்றை தேசிய நாடு அல்ல, பல்வேறு இனங்களின் கூட்டு தொகுப்பு. அந்தப் பல்வேறு இனங்களில் தனித்துவம் என்பது மொழி அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. அனைத்து மொழிகளுக்கும் இடையில் சமத்துவம் நிலவுவதுதான் விடுதலையின் அடையாளம். இந்தியாவில் 22 மொழிகள் அரசால் ஏற்று கொள்ளப்பட்டவை. 22 மொழிகளும் எட்டாவது அட்டவணையில் அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

அந்தந்த மாநில மொழிகள் அந்தந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக வேண்டும். மொழிகளுக்கு இடையில் சமத்துவம் இருந்தால்தான் மொழி பேசும் மக்களுக்கு இடையில் சமத்துவம் இருக்கும், ஒரு மொழியை திணித்தால் எந்த மொழி திணிக்கப்படுகிறதோ அந்த மொழிக்கு உரியவர்கள் தான் எல்லா நிலையிலும் ஆதிக்கத்தில் வருவார்கள். இந்தி திணிப்பு என்பது வெறும் மொழியினை பற்றிய செய்தி அல்ல. நம்முடைய சந்தை பறிபோகும், நம்முடைய வேலைவாய்ப்பு பறிபோகும், தொழில் வளர்ச்சி பறிபோகும். ஒற்றுமையுடன் வாழும் மக்களை மொழியின் அடிப்படையில் பிரிக்கும் உத்தியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழை தாழ்த்தி இந்தியை திணிக்க முயற்சிப்பதா?..அமித்ஷாவுக்கு ஜவாஹிருல்லா எம்எல்ஏ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Jawahirullah ,MLA ,Amit Shah ,Chennai ,Mamak chief ,MH Jawahirullah ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் அரசை மிரட்டுகிறார் அமைச்சர்...