×

அமமுக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு: தலைவராக முன்னாள் எம்.பி. கோபால் நியமனம்

சென்னை: அமமுக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே சமயத்தில் இதுநாள் வரை காலியாக இருந்த தலைவர் பதவிக்கு முன்னாள் எம்.பி., கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். அமமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் தனியார் மண்டபத்தில், அக்கட்சியின் துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொதுக்குழுவில், பொதுச் செயலாளர், தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அமமுக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவராக முன்னாள் எம்பி. கோபால், துணை தலைவராக அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் சசிகலாவுக்காக, நீண்ட காலமாக தலைவர் பதவி காலியாக இருந்த வைக்கப்பட்டிருந்த நிலையில் தலைவராக கோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.  அமமுக பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஐக்கிய அமீரகம் மற்றும் குவைத்தில் அமமுக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதை பொதுக் குழு அங்கீகரிப்பது. கோவை, திருப்பூர், விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டதை பொதுக்குழு அங்கீகரிப்பது. அம்மா தொழிற்சங்க பேரவை முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனோடு பல துணை சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள் தெரிவித்து தீர்மானம் உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனை தொடர்ந்து டிடிவி தினகரன் பேசுகையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க ஓ.பி.எஸ். அணியுடன் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளோம். முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் அவர்கள் மீதுள்ள வழக்குகளுக்காக அச்சத்தில் உள்ளார்கள். திமுகவுடன் பேரம் பேசி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தனித்து நிற்பாரா? தேர்தலில் தனித்து போட்டியிடும் தைரியமும் தில்லும் அமமுகவுக்கு மட்டும் தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமியிடம் அடைக்கலம் ஆவேன் என எதிர்பார்த்தால் அது ஒரு போதும் நடக்காது. எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை டிடிவி ஒரு போதும் மன்னிக்க மாட்டான். துரோகத்தை தோலுரிக்காமல் விடமாட்டேன்.

வரும் காலத்தில் அரசியல் அரங்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சிலரை வீழ்த்தாமல் ஓயமாட்டேன். எடப்பாடி பழனிசாமி எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்து தேர்தலில் நின்றாலும் வீழ்த்தாமல் ஓயமாட்டேன். கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேர்தல் களம் காண்போம். முதலில் துரோகிகளை வீழ்த்துவோம். எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளவர்கள் ‘‘கூட்டப்பட்ட கூட்டம்’’, அமமுகவில் உள்ளவர்கள் தானாக சேர்ந்த கூட்டம். மதுரை மாநாட்டுக்கு எப்படியும் 100 கோடி செலவு செய்வார்கள். தென் மாவட்டங்களில் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதை காட்டிக்கொள்ளவே மாநாடு நடத்துகிறார்கள். எடப்பாடி பழனிசாமி எத்தனை மாநாடு போட்டாலும் வெற்றி பெற முடியாது.’’ இவ்வாறு தெரிவித்தார்.

The post அமமுக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு: தலைவராக முன்னாள் எம்.பி. கோபால் நியமனம் appeared first on Dinakaran.

Tags : DTV ,Dinakaran ,Chairman General Secretary ,Chairman GP ,Kopal ,Chennai ,DTV Dinakaran ,general secretary of state ,Imperative General ,Former ,
× RELATED தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி...