×

குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை சான்று பெற்ற கோவை தம்பதி

கோவை: குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை என கோவை தம்பதியர் சான்றிதழ் பெற்றுள்ளனர். கோவை பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் பிரலோப். இவரது மனைவி பீனா பிரீத்தி. இவர்களுக்கு 3 வயதில் ஹாதியா என்ற பெண் குழந்தை உள்ளது. தங்களின் குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை என்று குறிப்பிடும் வகையில் சான்றிதழ் வாங்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தனர். அதை அதிகாரிகள் பரிசீலித்து பிரலோப், பிரீத்தி தம்பதியின் குழந்தை ஹாதியாவுக்கு ஜாதி, மதம் இல்லையென்ற சான்றிதழை வழங்கினர்.

இது குறித்து பெற்றோர் கூறுகையில், ‘எல்லோரும் இந்தியர்கள் என்ற மனநிலை இருந்தால்போதும். எங்கள் மகளை ஜாதி, மதம் வைத்து பிரிக்க வேண்டாம் என முடிவு செய்தோம். இவ்வாறு சான்று பெறுவதால் வருங்காலத்தில் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகையும் எங்கள் குழந்தை பெற இயலாது என்று தெரிந்துதான் விண்ணப்பித்தோம். சான்று பெறுவதில், சிறிது காலதாமதம் ஏற்பட்டது. ஏன் இதை வாங்குகிறீர்கள் என நிறைய கேள்விகள் கேட்டனர். அதிகாரிகளுக்கு இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. தமிழ்நாடு அரசு ஏற்கனவே பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும்போது பெற்றோர் விருப்பப்பட்டால், ஜாதி, மதமில்லை என்று குறிப்பிடலாம்.

அல்லது அந்த கேள்விக்கான இடத்தை அப்படியே விட்டு விடலாம் என்று அரசாணை வெளியிட்டு உள்ளது. இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இதுகுறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என்றனர்.

The post குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை சான்று பெற்ற கோவை தம்பதி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Beelamedu Gandhi Nagar ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...