×

அரசு பள்ளிகளின் வளர்ச்சியை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள் மன்றத்தில் 1.41 லட்சம் பேர் இணைப்பு: மேலும் அதிகரிக்க அவகாசம் நீட்டிப்பு

 

வேலூர்: அரசு பள்ளிகளின் வளர்ச்சியை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள் மன்றத்தில் இதுவரை 1.41 லட்சம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர். மேலம் அதிகரிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கும், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முன்னாள் மாணவர்கள் இணைந்து செயல்படும் வகையில், முன்னாள் மாணவர்கள் மன்றம் அமைத்திட உத்தரவிடப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக அரசு பள்ளிகள் மீது பொறுப்புணர்வு கொண்டுள்ள குறைந்தபட்சம் 25 முன்னாள் மாணவர்களை ஜூலை 20ம் தேதிக்குள் கண்டறிந்து ‘tnschools.gov.in’ என்ற இணையதள பக்கத்தில் விவரங்களை பதிவு செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் முன்னாள் மாணவர் மன்றத்தில் அதிகபட்சமாக எத்தனை பேரை வேண்டுமானாலும் இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களின் நடவடிக்கையால் மாநிலம் முழுவதும் இதுவரை முன்னாள் மாணவர் மன்றத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 287 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் முன்னாள் மாணவர் மன்றத்தில் குறைந்தபட்சம் 25 மாணவர்கள் உள்ளார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். 25 பேர் உள்ள மன்றங்களிலும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்கு வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து தலைமை ஆசிரியர்களும் முன்னாள் மாணவர் மன்றத்தை வலுப்படுத்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* 40 சதவீதம் பெண்கள்
அரசு பள்ளி முன்னாள் மாணவர் மன்றங்களில் இதுவரை 1 லட்சத்து 41 ஆயிரத்து 287 பேர் இணைந்துள்ளனர். இதில் 78 சதவீதம் மேல்நிலை பள்ளிகளிலும், 46 சதவீதம் உயர்நிலை பள்ளிகளிலும், 40 சதவீதம் நடுநிலை பள்ளிகளிலும், 20 சதவீதம் தொடக்க பள்ளிகளிலும் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பங்கேற்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதிதாக தொடங்கிய பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

The post அரசு பள்ளிகளின் வளர்ச்சியை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள் மன்றத்தில் 1.41 லட்சம் பேர் இணைப்பு: மேலும் அதிகரிக்க அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Alumni Forum ,Vellore ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...