×

30 நாளில் 1,546 பண்ணை குட்டைகள் உலக சாதனை படைத்த கலெக்டர்: 67.87 கோடி லிட்டர் மழைநீர் சேமிக்கலாம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் 30 நாளில் 1546 பண்ணை குட்டைகள் அமைத்து கலெக்டர் உலக சாதனை படைத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரை திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் முன்னிலையாக இருந்தது. ஆனால் மழை பொய்த்ததால் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக்கி விற்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக பருவ மழை பெய்து குளம், குட்டை, ஏரிகள் ஒரு முறைக்கு 4 முறையாக நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் மாவட்டத்தில் பலரும் பணப்பயிர் மற்றும் தானிய பொருட்களை உற்பத்தி செய்தனர்.

ஆனால் குட்டைகள், ஏரிகள் தூர்வாரப்படாததால் ஆங்காங்கே மழை நீர் வெள்ளமாக சென்று விவசாயிகளுக்கு பயனில்லாமல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கரன் பாண்டியன் வறட்சி மாவட்டமாக உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தை, நீர்மிகு மாவட்டமாக மாற்றி விவசாயத்தை பெருக்க, துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்தார். மாவட்டம் முழுவதும் 1400 பண்ணை குட்டைகள் அமைக்க திட்டமிட்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். இதற்காக அரசு ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில், 208 ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மூலம் பண்ணை குட்டைகள் வெட்டும் பணியை கந்திலி ஒன்றியத்தில் கடந்த ஜூலை 1ம் தேதி பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்.

தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியனின் தீவிர முயற்சியால் விவசாயிகளின் நிலத்தில் தனிநபர் பண்ணை குட்டைகளும், அரசின் புறம்போக்கு நிலங்களில் கசிவு நீர் குட்டைகளும் என்று 1,400 பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டது. இதனை பார்த்த விவசாயிகள் தாமாக முன்வந்து பண்ணை குட்டைகள் அமைக்க கேட்டுக்கொண்டனர். அதன்பேரில் ஒரே மாதத்தில் மொத்தம் 1,546 பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் 5.68 முதல் 8.44 மீட்டர் வரை உள்ளது.

இதனால் திருப்பத்தூர் மாவட்டம் நீர்மிகு மாவட்டமாக மாறும். ஒரு பண்ணை குட்டையில் ஒவ்வொரு மழைக்காலத்திலும் 4 லட்சத்து 35 ஆயிரத்து 600 லிட்டர் மழை நீரும், 1,546 பண்ணை குட்டைகளில் 67.87 கோடி லிட்டர் (0.02 டிஎம்சி) மழை நீரும் சேமிக்க முடியும். 30 நாட்களில் 1,546 பண்ணை குட்டைகள் அமைத்ததை எலைட் வோல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்திய ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்கள் ஆய்வு செய்து, உலக சாதனை சான்றிதழ்கள் மற்றும் மெடல்களை கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியனிடம் வழங்கியது. இதன் மூலம் விளைபொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

The post 30 நாளில் 1,546 பண்ணை குட்டைகள் உலக சாதனை படைத்த கலெக்டர்: 67.87 கோடி லிட்டர் மழைநீர் சேமிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Tirupattur district ,
× RELATED ஓசூரில் லாரி மோதி தொழிலாளி பலி