×

ஸ்ரீபெரும்புதூர் அருகே திமுக பிரமுகர் கொலை குறித்து 4 பேரிடம் விசாரணை 6 தனிப்படைகள் தீவிரம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று மாலை திமுக பிரமுகர்மீது நாட்டு வெடிகுண்டு வீசி, ஒரு மர்ம கும்பல் சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. இதுதொடர்பாக எஸ்பி சந்திரதாசன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்தனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக 4 பேரை சந்தேகத்தின் பேரில் ரகசிய இடத்தில் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் டோம்னிக்.

இவர், திமுகவில் மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி குமுதா, எச்சூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர்களின் மகன் ஆல்பட் (30). இவர், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய திமுக இளைஞரணி நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். மேலும், இவர் எச்சூர் பகுதியில் தனியார் தொழிற்சாலைகளில் ஸ்கிராப் எடுப்பது, டிரான்ஸ்போர்ட் மற்றும் தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தேவையான மண், ஜல்லி சப்ளை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருவதால், அங்கு இரும்பு ஸ்கிராப்புகளை ஏலம் எடுப்பதிலும், காண்ட்ராக்ட் பெறுவதிலும் பல்வேறு தரப்பினரிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இதேபோல் தனியார் தொழிற்சாலைகளுக்கு கட்டுமானப் பொருட்களான மணல், ஜல்லி, இரும்பு கம்பிகளை சப்ளை செய்வதிலும் பலத்த போட்டி நிலவி வருகிறது. இதனால் தொழில் போட்டி காரணமாக ஏற்படும் அடிதடி மோதல்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கொல்லப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை தனது நண்பர்களுடன் எச்சூர் பகுதியில் இரும்பு ஸ்கிராப் எடுக்கும் தனியார் தொழிற்சாலைக்கு திமுக இளைஞரணி நிர்வாகி ஆல்பட் சென்றுள்ளார். பின்னர், அத்தொழிற்சாலை அருகே தனக்கு சொந்தமான இடத்தில் நின்று பார்வையிட்டு உள்ளார். அப்போது அங்கு 4 பைக்குகளில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல், ஆல்பட்மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அந்த குண்டுகள் வெடித்து சிதறியதில் அச்சமான ஆல்பட் உயிருக்கு பயந்து ஓடத் துவங்கியுள்ளார். அவரை 8 பேர் கும்பல் துரத்தி சென்று, ஆல்பட்டை அரிவாளால் சரமாரி வெட்டியுள்ளனர். நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஆல்பட்டின் நண்பர்கள் 4 பேரும் காயமடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த ஆல்பட் அலறியபடி, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதைப் பார்த்ததும் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் பைக்குகளில் தப்பி சென்றது. படுகாயம் அடைந்த ஆல்பட்டை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே ஆல்பட் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், அங்கு அசம்பாவிதம் நடைபெறுவதை தடுக்க, அவரது சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இக்கொலை வழக்கு தொடர்பாக எஸ்பி சந்திரதாசன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், எச்சூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு தனியார் தொழிற்சாலை நிர்வாகியை மிரட்டிய வழக்கில் ஆல்பட் முன்ஜாமீன் பெற்றிருக்கிறார். இதுதொடர்பாக, அவர் நாள்தோறும் காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. எனினும், நாள்தோறும் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்துக்கு சென்று ஆல்பட் கையெழுத்திடாமல் தலைமறைவாக சுற்றி திரிந்துள்ளார். அவரை போலீசார் தேடி வந்துள்ளனர். இதற்கிடையே அவர் நேற்று மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, ஆல்பட் கொலை வழக்கு தொடர்பாக நேற்று நள்ளிரவு சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் கொலை நடந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் சிசிடிவி காமிரா பதிவுகளை தனிப்படை போலீசார் கைப்பற்றி, அதில் பதிவான கொலையாளிகள் முகம் மற்றும் அவர்களின் பைக் சென்ற வழித்தடத்தை தனிப்படை போலீசார் கண்காணித்து கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதனால் இன்று காலை எச்சூர் மற்றும் சுங்குவார்சத்திரம் பகுதிகளில் மக்களிடையே பரபரப்பு நிலவியது.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே திமுக பிரமுகர் கொலை குறித்து 4 பேரிடம் விசாரணை 6 தனிப்படைகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Dizhagam Pramukar ,Sriparudur ,Sriperudur ,Sripurudur ,Dizhagam Parmukar ,Sriepruthur ,
× RELATED விருத்தாசலம் அருகே திமுக பிரமுகர்...