×

மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகன நுழைவு கட்டண உரிமம் 1 கோடியே 93 லட்சத்துக்கு ஏலம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை காண வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு நுழைவு மற்றும் வாகன நிறுத்த கட்டணத்தை பேரூராட்சி நிர்வாகம் வசூலித்து வருகிறது. இதற்காக ஆண்டு தோறும் பொது ஏலம் நடத்தி தனியாருக்கு உரிமம் அளிக்கிறது.

2023-24-ம் ஆண்டில் உரிமம் ஒப்படைக்கும் நாள் தொடங்கி 2024 மார்ச் மாதம் 31-ந்தேதி வரை கட்டணம் வசூலிக்கும் உரிமத்திற்கு, ரூ.15 லட்சம் வைப்புத்தொகை நிர்ணயிக்கப்பட்டது.நேற்று முன்தினம் பொது மற்றும் இணையவழி ஏலம் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் வி.கணேஷ் மேற்பார்வையில் பொது ஏலம் நடத்தப்பட்டது. இதில் தி.மு.க.வை சேர்ந்த முந்தைய ஏல உரிமைதாரர் தங்கமணி, அ.தி.மு.க.வை சேர்ந்த வின்சென்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

அரசின் ஆரம்ப கேட்பு தொகையாக ரூ.1½ கோடிக்கு ஏலம் தொடங்கப்பட்டது. யாரும் ஏலம் கோரவில்லை. இதையடுத்து ஏலத்தொகை ரூ.1½ கோடியாக குறைக்கப்பட்டது. ஏலதாரர்கள் 3 பேரும் ஏலத்தொகையை மாறி, மாறி உயர்த்தி கேட்டனர். திடீர் திருப்பமாக அன்பரசன் ரூ.1½ கோடிக்கு உயர்த்தி ஏலம் கேட்டார். அவரை தொடர்ந்து யாரும் கேட்காததால் ஏலம் முடிக்கப்பட்டது. பிறகு இணையவழி ஏலத்தில் அவரவர் குறிப்பிட்டிருந்த ஏல தொகையை பேரூராட்சி நிர்வாகத்தினர் பரிசீலித்தபோது, தங்கமணி ரூ.1 கோடியே 61 லட்சத்து 70 ஆயிரத்துக்கு கோரியிருந்தார்.

2 ஏலங்களில் இணைய வழியில் தங்கமணி கோரியிருந்த தொகையே அதிகம் என்பதால் அவருக்கு உரிமம் வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவை சேர்த்து ரூ.1 கோடியே 93 லட்சத்து 29 ஆயிரத்து 744 பெற்றதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் ஏலதாரருக்கு ஒப்புதல் அளித்து கட்டணம் வசூல் செய்ய உரிமம் வழங்கப்படுவதாக தெரிவித்தனர். இதைதொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி வரை 8 மாதத்திற்கு ஏலதாரருக்கு கட்டணம் வசூலிக்க உரிமம் வழங்கப்பட்டது.

 

The post மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகன நுழைவு கட்டண உரிமம் 1 கோடியே 93 லட்சத்துக்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Chengalputtu ,Chengalputtu District Mammallapura ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...