×

பல குடியரசு தலைவர்களை உருவாக்கி பாரம்பரிய புகழ் கொண்டது சென்னை பல்கலைக் கழகம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு புகழாரம்

சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்பட பல குடியரசுத் தலைவர்களை உருவாக்கி பாரம்பரிய புகழ் கொண்டது இந்த சென்னைப் பல்கலைக் கழகம் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புகழாரம் சூட்டினார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அவர் இன்று காலை அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கில் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழக இணை வேந்தரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி, பல்கலைக்கழக துணைவேந்தர் கெளரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு 100 மாணவர்களுக்கு தனது கைகளால் பட்டமும், பதக்கமும் வழங்கினார். விழாவில் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் உட்பட 565 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் விழாவில் மொத்தம் 762 பேர் பட்டம் பெற்றனர். அதுமட்டுமல்லாமல் சென்னை பல்கலையுடன் இணைப்பு கல்லூரிகளில் பயின்ற 89,934 மாணவர்களும், தொலைதூரக்கல்வியில் பயின்ற 12,166 பேரும், பல்கலைக்கழக வளாகத்தில் பயின்ற 1,367 மாணவர்கள் உட்பட மொத்தம் 1,04,416 பேர் பட்டம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி விழாப் பேருரையாற்றியதாவது:

கடந்த 165 ஆண்டுகளாக இந்த பல்கலைக் கழகம் கல்வியை பல்வேறு சவால்களுக்கு இடையே வழங்கி வருகிறது. தென்னிந்தியாவில் இந்த பல்கலைக் கழகம் புகழ் வாய்ந்து இருப்பதுடன் பல்வேறு பல்கலைக் கழகங்கள் உருவாகவும் காரணமாக இருந்து வருகிறது. அதேபோல டாக்டர் ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, டாக்டர் அப்துல்கலாம் உள்ளிட்ட பல்வேறு குடியரசுத் தலைவர்களையும் அறிஞர்களையும் உருவாக்கியது இந்த பல்கலைதான். சிவி ராமன், எஸ்.சந்திர சேகர், ராஜாஜி போன்றவர்கள் இந்த பல்கலையில் படித்தவர்கள். கவிக்குயில் சரோஜினிநாயுடுவும் இங்கு படித்தவர் தான். சென்னை பல்கலையின் முன்னாள் மாணவர்கள் இந்த பல்கலைக்கு நன்கொடை வழங்கி இந்த சமூகத்துக்கு கல்வி கிடைக்க உதவி வருகின்றனர்.

கல்வியில் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறது இந்த பல்கலை. மேலும் பல்வேறு நாடுகளுடன் கல்வி தொடர்பான இணைப்பும், ஒப்பந்தங்களையும் இந்த பல்கலை செய்துள்ளது. வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி சமூகம் மற்றும் நாட்டுக்கும் தேவையான வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். உங்களின் அடுத்த கட்ட வாழ்வில் மாற்றங்களை கல்வி உருவாக்கும். அதனால் கடினமாக உழைத்து உங்கள் கனவுகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். பாரதியின் கூற்றுப்படி, அனைத்தும் கற்க வேண்டும். உங்கள் வாழ்வில் இது பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களை நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.

The post பல குடியரசு தலைவர்களை உருவாக்கி பாரம்பரிய புகழ் கொண்டது சென்னை பல்கலைக் கழகம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Chennai University of Chennai ,President Fluvupathi Murmu ,Chennai ,Dr. ,Raadhakrishnan ,President ,Fluvupathi Murmu ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...