×

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் துப்பாக்கியுடன் கைது

சென்னை: பெங்களூருவில் இருந்து காரில் வந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொது செயலாளர் அஸ்வத்தாமன் துப்பாக்கியுடன் திடீரென கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து உரிமம் பெறாத துப்பாக்கி, தோட்டாக்கள், கத்தி பறிமுதல் செய்யப்பட்டன. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் அஸ்வத்தாமன். இவர், நேற்று காலை பெங்களூருவில் இருந்து தனது காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, ஆவடி காவல் நிலைய எல்லைக்குள் நசரத்பேட்டை சோதனை சாவடியில் இவரது கார் வந்தபோது. தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். பிறகு காரில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது, காருக்குள் உரிமம் இல்லாத துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் கத்தி இருந்தது தெரிய வந்தது. அவருடன் காரில் வந்த இரண்டு பேரையும் ஆவடி காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர். பின்னர், மீஞ்சூர் காவல் நிலையத்தில் அஸ்வத்தாமனை ஒப்படைத்தனர். மீஞ்சூர் போலீசார் நடத்திய விசாரணையில், இளைஞர் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான அஸ்வத்தாமன் என்பது தெரிய வந்தது.

போலீஸ் விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:
மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவரது மகன் ஜெயபிரகாஷ். திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர். இவர் கொண்டக்கரை பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் உள்பட பல நிறுவனங்களில் கான்டிராக்ட் எடுத்து பணி செய்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி பிரபல வியாசர்பாடி ரவுடி நாகேந்திரனின் மகனான அஸ்வத்தாமன் ஜெயபிரகாசை காரில் கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து துப்பாக்கி முனையில் மிரட்டி மாமூல் கேட்டுள்ளார். மேலும், பாக்கெட்டில் இருந்த ₹10,000ஐ பறித்துக் கொண்டு மாதம் மாதம் மாமூல் தர வேண்டும் என ஜெயபிரகாஷூக்கு கொலை மிரட்டல் விடுத்து எச்சரித்து அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து ஜெயபிரகாஷ் ஆவடி காவல் ஆணையர் சங்கரிடம் கடந்த வாரம் புகார் கொடுத்துள்ளார். ஆவடி சரக ஆணையர் சங்கர் உத்தரவின்படி இணை ஆணையர் விஜயகுமார் மேற்பார்வையில், துணை ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் குமரேசன், மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் அஸ்வத்தாமனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், பெங்களூருவில் இருந்து காரில் வந்த அஸ்வத்தாமன் (30) மற்றும் கூட்டாளிகள் மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி அண்ணா நகரை சேர்ந்த அச்சுதன் (30), கொண்டக்கரை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த புகழேந்தி (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அஸ்வத்தாமனின் கூட்டாளிகளான நந்தா, செல்வா, நரேஷ் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காங்கிரஸ் முக்கிய நிர்வாகி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன் இதற்கு முன்பு மாணவர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இளைஞர் காங்கிரசில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவரது கைது சம்பவம் காங்கிரசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது பற்றி அறிந்ததும் மீஞ்சூர் காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட கார்களில் வழக்கறிஞர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் வந்து குவிந்தனர்.

The post தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் துப்பாக்கியுடன் கைது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Youth Congress ,Principal General Secretary ,Aswathaman ,Chennai ,Chief General Secretary ,Ashwatthama ,Bengaluru ,
× RELATED திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் ஒருவரை...