×

செங்கல்பட்டு மருத்துவமனையின் குறைகள் சரி செய்யப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

செங்கல்பட்டு, ஆக. 6: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், குறைகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் என, சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு முறையான குடிநீர் வசதி கிடையாது. மருத்துவமனை முழுவதிலும் உள்ள அனைத்து வார்டுகளிலும் சுகாதாரமற்ற கழிவறைகள் உள்ளன. கழிவறைகளில் தண்ணீர் சரிவர வருவதில்லை.நோயாளிகளின் உதவியாளர்கள், உறவினர்கள் தங்குவதற்கு போதுமான இடவசதியில்லை கட்டிடங்களில் பல இடங்களில் மேல்கூரைகள் உடைந்து விழுந்து பெரும்பாலான இடங்களில் பழுதடைந்து காணப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வரிடம் முறையிட்டால் முறையான பதிலில்லை. அதை கண்டு கொள்வதில்லை என தொடர்ந்து நோயாளிகளின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் பேரில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தாய் வார்டு, அவசரசிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, பொதுமருத்துவப் பிரிவு என அனைத்து வார்டுகளிலும் உள்ள நோயாளிகளிடம் அவர்களது சிகிச்சை குறித்தும், மருத்துவமனையின் சர்வீஸ் குறித்தும் கேட்டறிந்தார். அனைத்து வார்டுகளிலும் உள்ள கழிவறைகளில் நேரடியாக உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் சமயலறை, வாஷிங் அறை உள்பட மருத்துவமனை முழுவதிலும் காலை 9மணிமுதல் 12மணிவரை தொடர்ந்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இதனால், மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள், ஆர்எம்ஓ. உள்பட தூய்மை பணியாளார்கள் என அனைவரும் பதட்டத்தில் இருந்தனர். ககன்சிங்பேடி நேரடியாக மருத்துவமனை முதல்வர் ராஜயிடம், ‘‘இரண்டு மாதத்தில் மீண்டும் வருவேன் அனைத்து குறைகளையும் சரிசெய்து வைக்கவேண்டும்.’’ என எச்சரித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கழிவறை, சமையலறை, வாஷிங் அறை என அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டேன். இதில் நிறைய குறைபாடுகள் உள்ளன. இதுகுறித்து, மருத்துவமனை முதல்வரிடம் எச்சரித்துள்ளேன். இக்குறைபாடுகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும்.’’ என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

The post செங்கல்பட்டு மருத்துவமனையின் குறைகள் சரி செய்யப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Hospital ,Chengalpattu ,Chengalpattu Government Hospital ,Health Secretary ,Kagandeepsingh ,Dinakaran ,
× RELATED 4 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து...