×

அரசு பள்ளிகளுடன் இணைந்து செயல்பட 1.41 லட்சம் முன்னாள் மாணவர்கள் கைகோர்ப்பு

நாகர்கோவில், ஆக.6: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுடன் இணைந்து செயல்பட 1 லட்சத்து 41 ஆயிரம் முன்னாள் மாணவர்கள் முன் வந்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் நலன் மீது பொறுப்புணர்வு கொண்ட 25 முன்னாள் மாணவர்களை கண்டறிந்து ஜூலை 20ம் தேதிக்குள் அவர்களின் தகவல்களை tnschools.gov.in என்ற இணையதள பக்கத்தில் முன்னாள் மாணவர்களுக்கான படிவத்தில் சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் முயற்சியாக இதுவரை 1 லட்சத்து 41 ஆயிரத்து 287 முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளியுடன் இணைந்து பயணிக்க முன் வந்துள்ளனர். அதில் 40 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளும் பங்கேற்க முன்வந்துள்ளனர். இந்த முயற்சியில் 78 சதவீதம் மேல்நிலை பள்ளிகளிலும், 46 சதவீதம் உயர்நிலை பள்ளிகளிலும், 40 சதவீதம் நடுநிலை பள்ளிகளிலும், 28 சதவீதம் தொடக்க பள்ளிகளிலும் பதிவு செய்துள்ளனர். அதிக அளவில் முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைக்க ஏதுவாக இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: குறைந்தபட்சம் 25 முன்னாள் மாணவர்கள் கொண்ட முன்னாள் மாணவர்கள் மன்றம் இருப்பதை அனைத்து அரசு பள்ளிகளும் உறுதி செய்ய வேண்டும். மேலும் அதிகபட்சமாக விருப்பம் உள்ள அனைத்து முன்னாள் மாணவர்களையும் பள்ளியுடன் ஒருங்கிணைக்கலாம். சமீபமாக தொடங்கப்பட்ட அல்லது தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளாக இருப்பின் குறிப்பாக தொடக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் பள்ளி படிப்பு முடிக்காத முன்னாள் மாணவர்கள் இருக்க வாய்ப்புள்ளதனால் அப்பள்ளிகள் மட்டும் மாணவர்கள் பள்ளி படிப்பு முடித்த பின்னர் முன்னாள் மாணவர்கள் மன்றம் உருவாக்க கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு பள்ளிகளுடன் இணைந்து செயல்பட 1.41 லட்சம் முன்னாள் மாணவர்கள் கைகோர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Tamil Nadu.… ,Dinakaran ,
× RELATED மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்