×

தெலுங்குதேசம் கட்சியினரை கண்டித்து சித்தூரில் முழு அடைப்பு போராட்டம்: அனைத்து கடைகளும் மூடல்

சித்தூர்: ஒருங்கிணைந்த சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியை கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று முழு அடைப்பு ேபாராட்டம் நடந்தது. இதனால் பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு, கடைகள் மூடப்பட்டு, சாலைகள் வெறிச்ேசாடி காணப்பட்டது. ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் அங்கல்லுவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அங்கு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் சந்திரபாபுவை பார்த்து ‘கோ பேக்’ என முழக்கமிட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கற்கள் வீசி தாக்கிக்கொண்டனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்ைத கலைக்க முயற்சி செய்தனர்.

அப்போது, போலீசார் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் போலீசாரின் பஸ், ஜீப் உள்ளிட்ட வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் போலீசார் மற்றும் இருகட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் சித்தூர் மற்றும் அன்னமையா மாவட்டத்தில் பதற்றம் நீடிக்கிறது. முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருங்கிணைந்த சித்தூர் மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

அதிகாலை முதலே கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. பஸ், ஆட்டோ, லாரி உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.ஆளுங்கட்சியினர் ஆங்காங்கே ஊர்வலமாக ெசன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த முழுஅடைப்பு போராட்டத்தால் வேலூரில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அனைத்து பஸ்களும் வேலூர் பஸ்நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

சந்திரபாபுநாயுடு மீது வழக்குப்பதிவு
பொதுக்கூட்டத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அனந்தபூர் சரக டிஐஜி ஆர்.என்.அம்மி கூறினார். அவர் கூறுகையில்,’ முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு அவர் செல்லும் பாதை வழியாக செல்லாமல் திடீரென புங்கனூர் மண்டலத்திற்கு செல்வதாக தெரிவித்தார். வேண்டுமென்றே தெலுங்கு தேசம் கட்சியினர் போலீசாரின் மீது தாக்குதல் நடத்த ஏற்கனவே சதி திட்டம் செய்தனர்.

பெங்களூருவில் இருந்து அடியாட்களை அழைத்து வந்து வேண்டுமென்றே கலவரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். படுகாயம் அடைந்த 13 போலீசாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கலவரத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினரில் இதுவரை 40 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதேபோல், பொதுக்கூட்டத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய முன்னாள் முதல்வர் சந்திரபாபு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

குப்பத்தில் பஸ் கண்ணாடி உடைப்பு
சித்தூரில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு உருவபொம்மையை ஆளும் கட்சியினர் எரித்ததை கண்டித்து பூதலப்பட்டு பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் முதல்வர் ஜெகன்மோகன் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதேபோல் குப்பம் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ் கண்ணாடி உடைந்தது.

The post தெலுங்குதேசம் கட்சியினரை கண்டித்து சித்தூரில் முழு அடைப்பு போராட்டம்: அனைத்து கடைகளும் மூடல் appeared first on Dinakaran.

Tags : telugadesam party ,Chittoor ,YSR Congress ,Telugu Desam Party ,Unified Chittoor district ,Dinakaran ,
× RELATED சித்தூர் ரயில், பேருந்து நிலையங்களில் துப்புரவு பணிகளை ஆணையர் ஆய்வு