×

தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டில் ஜம்மு காஷ்மீரில் 3 வீரர்கள் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 3 வீரர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளை தேடும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஹலன் காட்டுப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வீரர்கள் அங்கு விரைந்தனர். அப்போது தீவிரவாதிகள் திடீரென வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதற்கு வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

எனினும் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் 3 வீரர்கள் படுகாயடைந்தனர் உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 3 வீரர்களும் நேற்று உயிரிழந்தனர். இதனிடையே என்கவுன்டர் நடந்த காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று காலை கூடுதலை படையும் குவிக்கப்பட்டு தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. பிர்பஞ்சல் பகுதியின் வழியாக இவர்கள் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

டெல்லி முதல்வர் இரங்கல்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பதிவில், ‘‘தீவிரவாதிகளுடனான மோதலில் நமது நாட்டை காப்பாற்றிய வீரர்களின் அழியாத தியாகத்திற்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் உயிரை பணயம் வைத்த நம்மை பாதுகாக்கின்றனர். துணிச்சலான வீரர்களால் இந்த நாடே பெருமை கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள குந்த்தா- கவாஸ் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது நடத்தப்பட்ட என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட தீவிரவாதி யார், எந்த அமைப்பை சேர்ந்தவன் என்பது குறித்து அடையாளம் காணப்படவில்லை.

The post தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டில் ஜம்மு காஷ்மீரில் 3 வீரர்கள் வீரமரணம் appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Srinagar ,Jammu and ,Kashmir ,Kulkam ,
× RELATED ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை