×

வருமானத்தைவிட அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு மத்திய கலால்துறை அதிகாரி, மனைவி விடுதலை: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் மத்திய கலால் ஆணையரக நலப் பிரிவின் கண்காணிப்பாளர் கோபி (65). இவர், 1991 ஜனவரி முதல் 1997 ஆண்டு ஆகஸ்ட் வரை, கலால் துறையில் இன்ஸ்பெக்டராகவும், 1990 மார்ச் முதல் 1998 ஜூன் வரை, சி.பி.ஐ.யில் இன்ஸ்பெக்டராகவும் அயல் பணியில் இருந்தார். இந்நிலையில், 1991 முதல் 2003ம் ஆண்டு வரையிலான 12 ஆண்டு காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக 36 லட்சத்து 58 ஆயிரத்து 313 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக இவர் மீது புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், கோபி, அவரது மனைவி அமுதா (55) ஆகிய 2 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு 12வது கூடுதல் சி.பி.ஐ. நீதிபதி மலர் வாலண்டினா முன் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் எதிராக 2006 நவம்பர் 21ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கில் 46 சாட்சிகள், 198 ஆவணங்கள் பட்டியலிடப்பட்டன. சி.பி.ஐ. தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் அலெக்ஸாண்டர் லெனின் ராஜா, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் சி.எஸ்.எஸ்.பிள்ளை, மாருதி ராஜ் ஆகியோர் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சி.பி.ஐ.யில் டி.எஸ்.பி. பதவியை வகித்ததாக கூறி குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஆதாயம் பெற்று மோசடியில் ஈடுபட்டனர் என்பதற்கான ஒரு சான்று ஆவணங்களும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட காலத்தில், 3.07 சதவீதம் மட்டுமே அவர்களது வருவாய் ஆதாரங்களில் இருந்து கூடுதலாக பெற்றுள்ளனர். இது, மிகவும் குறைவு. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசு இடமின்றி நிரூபிக்காததால் இருவரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று தீர்ப்பளித்தார்.

The post வருமானத்தைவிட அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு மத்திய கலால்துறை அதிகாரி, மனைவி விடுதலை: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Central CU ,Chennai CPI Special Court ,Chennai ,Gobi ,Welfare ,Division ,Central ,Art Commissioner ,Chennai Nungambakkam ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...