×

3 நாள் பயணமாக சென்னை வந்தார் ஜனாதிபதி முர்மு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்; முன்னதாக முதுமலை காப்பகத்தை பார்வையிட்டார்

சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று மாலை சென்னை வந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். முன்னதாக ஊட்டி அருகே முதுமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்று பார்வையிட்டார். அங்கு ஆஸ்கர் புகழ் பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அங்கு யானை குட்டிகளுக்கு உணவு, பழங்கள் வழங்கினார். தமிழ்நாட்டில் 3 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மைசூர் வந்தார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு நேற்று மாலை 3.30 மணிக்கு சென்றார். அங்கு அவரை அமைச்சர்கள் மதிவேந்தன், ராமசந்திரன், வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கலெக்டர் அம்ரித், எஸ்பி பிரபாகர் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், கார் மூலம் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்றார். முகாமை பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கு பொம்மன் மற்றும் பெள்ளியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பரிசுகளையும் வழங்கினார். தங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என கேட்டார். அதற்கு, எங்களுக்கு தேவையான உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்துள்ளது என பொம்மன், பெள்ளி தம்பதி தெரிவித்தனர்.

பின்னர் ஜனாதிபதி அங்குள்ள பழங்குடியின மக்களை சந்தித்து பேசினார். முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கினார். மாலை 5 மணியளவில் காரில் புறப்பட்டு மசினகுடி வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, திடீரென காரில் இருந்து இறங்கி பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கினார். சிறுவர், சிறுமியர்களுக்கு சாக்லெட் வழங்கினார். தொடர்ந்து 5.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மசினகுடியில் இருந்து மைசூர் புறப்பட்டு சென்றார். மைசூரில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் ஜனாதிபதி முர்மு புறப்பட்டு, நேற்று மாலை 6:58 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் விமானம் அருகில் சென்று வரவேற்றனர்.

அதன்பின்பு தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு, உதயநிதி ஸ்டாலின், அன்பரசன், எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், இ.கருணாநிதி எம்எல்ஏ, சென்னை மாநகர மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, முப்படையைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் இந்திய விமானப்படை கமாண்டிங் அலுவலர் ரித்திஷ் குமார், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத், மற்றும் ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், வங்கதேச நாட்டு தூதர்கள், ஜனாதிபதி முர்முவை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர். அதன் பின்பு ஜனாதிபதி முர்மு குண்டு துளைக்காத காரில் ஏறி, இரவு 7.10 மணிக்கு, கிண்டி ராஜ்பவனுக்கு புறப்பட்டு சென்றார்.

இன்று காலை 10 மணியளவில் காரில் புறப்பட்டு, சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் 165வது பட்டமளிப்பு விழாவில் திரவுபதி முர்மு பங்கேற்கிறார். தொடர்ந்து மதியம் 12 மணியளவில் கார் மூலமாக கிண்டி ராஜ்பவனை வந்தடைகிறார். மாலை 3.15 மணியில் இருந்து 3.45 மணிவரை ராஜ்பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் திரவுபதி முர்மு பங்கேற்கிறார். பின்னர், மாலை 4 மணி முதல் 5 மணிவரை முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து, இரவு 7 மணி முதல் 7.45 மணிவரை ராஜ்பவனில் நடைபெறும் மகாகவி பாரதியார் விழாவில் பங்கேற்று, கலைநிகழ்ச்சிகளை ரசிக்கிறார்.

அதோடு, ஜனாதிபதியை கவுரவிக்கும் வகையில் விருந்து அளிக்கப்படுகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட சில முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர் என கூறப்படுகிறது. 7ம் தேதி காலை 9.30 மணியளவில் ராஜ்பவனில் இருந்து காரில் புறப்பட்டு பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார். காலை 9.55 மணியளவில் விமான படையின் தனி ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரிக்கு செல்கிறார். 8ம் தேதி மாலை 4.25 மணியளவில் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு, மாலை 5.05 மணியளவில் சென்னை வந்தடைகிறார். அங்கு வழியனுப்பு விழா நடக்கிறது. பின்னர் தனி விமானம் மூலமாக டெல்லிக்கு செல்கிறார்.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முறையான அனுமதி மற்றும் அடையாள அட்டை இல்லாதவர்கள், பழைய விமான நிலைய பகுதிகளுக்கு செல்ல அனுமதி இல்லை. அங்குள்ள கார்கோ, கூரியர் நிறுவனங்களுக்கு வருபவர்கள், தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் 8ம் தேதி மாலை ஜனாதிபதி டெல்லி திரும்பம் வரை அமலில் இருக்கும் என சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தென்சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தில் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி சங்கர்ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஆகியோரது மேற்பார்வையில், ஐஜி கண்ணன் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* புத்தகம் வழங்கிய சிறுமி
மசினகுடி பஜார் பகுதியில் பொதுமக்களை சந்தித்த ஜனாதிபதி முர்முவுக்கு, அனன்யா விஷ்வேஷ் என்ற சிறுமி தான் எழுதிய `பேட் ஆப் மசினகுடி’ என்ற புத்தகத்தை வழங்கினார். அந்த சிறுமிக்கு சாக்லெட் வழங்கி ஜனாதிபதி நன்றி கூறி சென்றார்.

* யானைகளை பாதுகாப்பது தேசிய பொறுப்பு: ஜனாதிபதி டிவிட்
ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது டிவிட்டரில், யானைகளை பாதுகாக்க வேண்டியது நமது தேசிய பொறுப்பு. இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பாற்றுவதில் பழங்குடி சமூகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சமூகங்களுக்கு தங்களது அரசியலமைப்பு உரிமைகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டியது மிகவும் முக்கியம் என்று பதிவிட்டுள்ளார்.

* தம்பதியர் மகிழ்ச்சி
ஜனாதிபதி திரவுபதி முர்மு தங்களை சந்தித்தது மகிழ்ச்சி அளித்ததாக பொம்மன், பெள்ளி தம்பதியர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், எங்களை முதன்முதலில் சந்தித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.1 லட்சம் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து ஜனாதிபதி எங்களை டெல்லிக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பின், பிரதமர் மோடி தெப்பக்காடு முகாமிற்கு நேரில் வந்து எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் பெள்ளிக்கு காப்பாளர் வேலையும் வழங்கினார் என்றனர்.

* ஜனாதிபதிக்கு வரவேற்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை தமிழ்நாட்டுக்கு வரவேற்று, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள, நீடுபுகழ் தமிழ்ச் செவ்வியல் இலக்கியமான திருக்குறளின் ஒடிய மொழி பெயர்ப்பினை வழங்கினேன். குடியரசுத் தலைவர் தமிழ்நாடு வருகைக்கு நன்றி’’ என கூறியுள்ளார்.

The post 3 நாள் பயணமாக சென்னை வந்தார் ஜனாதிபதி முர்மு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்; முன்னதாக முதுமலை காப்பகத்தை பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Tags : President ,Murmu ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Mudumalai Archive ,Dravupati Murmu ,
× RELATED அயோத்தி ராமர் கோயிலில் முர்மு இன்று வழிபாடு