×

இந்தி திணிப்புக்கு ஆதரவாக பேசிய அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை: மொழி புரட்சி காலத்தை மீண்டும் உருவாக்க வேண்டாம்; சொல்வதை எல்லாம் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல என சாடல்

சென்னை: இந்தி திணிப்புக்கு ஆதரவாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 1965ம் ஆண்டு நடந்த மொழி புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார். மேலும் சொல்வதை எல்லாம் கேட்டு நடக்க தமிழ்நாடு ஒன்றும் தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். டெல்லியில் அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் 38வது கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசுகையில், ‘‘இந்தி மொழி எந்த மாநில மொழிகளுடனும் போட்டி போடவில்லை. அனைத்து இந்திய மொழிகளையும் மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே தேசத்தை வளர்ச்சி அடையச் செய்ய முடியும்.

அதே சமயம், இந்தியை எந்த எதிர்ப்பும் இல்லாமல் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அலுவல் மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்வது சட்டம் இயற்றியோ, அறிவிப்பு வெளியிட்டோ செய்யப்படக் கூடாது, மாறாக நல்லெண்ணம், உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் வாயிலாக செய்யப்பட வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மரியாதை அளிக்கும் போதுதான் அலுவல் மொழி ஏற்றுக் கொள்ளப்படும்’’ என்றார். இந்தி திணிப்புக்கு ஆதரவான அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்று கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு, மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்கு கொத்தடிமையாக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதை கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல. தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்கு சென்றதும் நஞ்சை பரப்புவதும் பாஜவின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தி திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் என பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்க தொடங்கி இருப்பதை அமித் ஷா உணர வேண்டும். 1965ம் ஆண்டு நடந்த மொழி புரட்சி காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தி திணிப்பு முயற்சி வெல்லாது: ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு முயற்சி ஒருபோதும் வெல்லாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய மக்கள் இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் குறைவாக இருந்தாலும் கூட, என்றாவது ஒருநாள் ஒட்டுமொத்த இந்தியர்களும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இந்தியை ஏற்றுக் கொண்டாகத்தான் வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். உள்துறை அமைச்சரின் கருத்து இந்தி மீதான அவரது நம்பிக்கையை காட்டவில்லை; மாறாக, இந்தி திணிப்பின் மீதான நம்பிக்கையையே காட்டுகிறது. இந்தி திணிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெல்லாது.

இந்தியை ஏற்றுக்கொள்ள தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் ஏங்கவில்லை; அவை எப்போதும் எதிர்ப்பு நிலையில்தான் உள்ளன. அத்தகைய சூழலில் அனைவரும் இந்தியை எதிர்ப்பின்றி ஏற்கும் நிலை வரும் என்றால், அத்தகைய நிலையை ஏற்படுத்த ஒன்றிய அரசு திட்டமிடுகிறது என்றுதான் பொருள். கடந்த காலங்களில் அத்தகைய முயற்சிகள் எப்படி வீழ்த்தப்பட்டனவோ, அதேபோலவே இனிவரும் காலங்களிலும் வீழ்த்தப்படும். இது உறுதி.
எந்த மொழியுடனும் இந்தி போட்டிப்போடவில்லை என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறுவது உண்மையென்றால், தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகளுக்கு உரிய தகுதியை வழங்க ஒன்றிய அரசு மறுப்பது ஏன்? மாநில மொழிகள் ஒன்றிய அலுவல் மொழிகளாக்கப்பட்டால் இந்தி வீழ்ந்து விடும் என்ற அச்சத்தால் தானே?

இந்தி மொழியின் செழுமை மீதும், வலிமை மீதும் நம்பிக்கை இருந்தால், தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்க ஒன்றிய அரசு தயங்குவது ஏன்? தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழிகளாக ஒன்றிய அரசு அறிவிக்கட்டும். அவற்றில் எந்த மொழி சிறந்த மொழியோ, எது இலக்கிய வளம் மிக்க மொழியோ, எது இலக்கணத்தில் சிறந்த மொழியோ அது மக்கள் மனங்களை ஆளட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒற்றை மொழியை திணிப்பதா: பாஜ, ஆர்எஸ்எஸ் ஆகியவை, ஒற்றை மொழி, ஒற்றை கலாசாரம் என்ற திசையில் பயணிக்கிறது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை உள்ளூர் மொழிகள் என்று சொன்னதுடன், காலப்போக்கில் அனைவரும் இந்தியை ஏற்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் விஷம் கக்கியுள்ளார். பல மொழிகள் பேசும் இந்தியாவின் மீது ஒற்றை மொழியை திணிக்கும் பாஜ ஆட்சியின் இந்தப் போக்கினை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 38வது கூட்டத்துக்கு தலைமையேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளை, ‘உள்ளூர் மொழிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பேசுகையில், காலப்போக்கில் இந்தியை அனைவரும் ஏற்றாகும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இப்போது பாஜ மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவை ஒற்றை மொழி, ஒற்றை கலாசாரம் என்ற திசையில் பயணிக்கிறது. இந்தி மொழியை தனது அரசியல் ஆயுதமாக்கி குறுகிய லாபமடையும் நோக்கில் செயல்படுகிறது. நாட்டில் 60% அதிகமான மக்களுக்கு இந்தி தாய்மொழி இல்லை. ஒன்றிய அரசி நடவடிக்கைகள் மக்களை கொதிப்படையச் செய்து போராட தூண்டுவதாகவே அமைந்துள்ளன. இதே திசையில் ஒன்றிய அரசு பயணிக்குமானால், எப்பாடுபட்டாவது போராடித் தடுப்போம் – அனுமதிக்க மாட்டோம். பன்முக இந்தியாவையும், மொழி சமத்துவத்தையும் பாதுகாப்போம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

* எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்க வேண்டும் என்ற அமித் ஷாவின் பேச்சு, மற்ற மொழி பேசுவோரை கொத்தடிமையாக்கும் எதேச்சாதிகாரம்.
* தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்கு சென்றதும் நஞ்சை பரப்புவதும் பாஜவின் பசப்பு அரசியல்.
* இந்தி திணிப்பை இப்போது மேற்கு வங்கம், கர்நாடகம் என பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்க தொடங்கிள்ளதை உணர வேண்டும்.

The post இந்தி திணிப்புக்கு ஆதரவாக பேசிய அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை: மொழி புரட்சி காலத்தை மீண்டும் உருவாக்க வேண்டாம்; சொல்வதை எல்லாம் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல என சாடல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Amit Shah ,Tamil Nadu ,Chennai ,M.K.Stalin ,Union ,Home Minister ,Chatal ,
× RELATED புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...