×

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் கோயில் குடமுழுக்கு விழாக்களுக்கு உடனடி அனுமதி: தருமபுரம் ஆதீனம் பாராட்டு

நெல்லை: தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோயில் குடமுழுக்கு விழாக்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது என்று திருக்குறுங்குடியில் தருமபுரம் ஆதீனம் பாராட்டு தெரிவித்தார். நெல்லை மாவட்டம், களக்காடு அருகே திருக்குறுங்குடி அழகியநம்பி கோயிலில் பைரவர் சன்னதியையொட்டி ஸ்ரீமகேந்திரகிரி நாதர் (சிவன்) சன்னதி கட்டப்பட்டு கடந்த ஜூன் 8ம் தேதி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. இக்கோயிலுக்கு நேற்று தருமபுரம் ஆதீனம், மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வந்தார்.

புதிதாக கட்டப்பட்ட சிவன் சன்னதி, மற்றும் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி சுவாமிகள், கால பைரவர் சன்னதிகளில் தரிசனம் செய்தார். தொடர்ந்து திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயரை சந்தித்து, சிவன் சன்னதி சிறப்பாக கட்டப்பட்டு உள்ளதாக நன்றி தெரிவித்தார். பின்னர் தருமபுரம் ஆதீனம் நிருபர்களிடம் கூறுகையில், ‘சைவம், வைணவம் இணைந்து இருப்பதே நமது உறவு முறை. அதன்படியும், கோர்ட் உத்தரவின் பேரிலும் பழமை மாறாமல், அதே இடத்தில் சிவன் சன்னதியை புதுப்பித்து கட்டியுள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நிறைய கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. குடமுழுக்கு நடத்த உடனடியாக அனுமதி கிடைத்து வருகிறது. இந்த பணியை அறநிலையத்துறை அமைச்சர், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செய்து வருகின்றனர்’ என்று பாராட்டு தெரிவித்தார்.

The post திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் கோயில் குடமுழுக்கு விழாக்களுக்கு உடனடி அனுமதி: தருமபுரம் ஆதீனம் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DMK ,Dharumapuram ,Adheenam ,Nellai ,DMK government ,Thirukurungudi ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...