×

நாகர்கோவிலில் 2 நாளில் 10 பேர் சிக்கினர்; சிறார்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கும் அபராதம்: போலீஸ் நடவடிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவிலில் சிறார்கள் பைக், கார் ஓட்டினால் பெற்றோருக்கு அபராதம் விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 2 நாளில் 10 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பைக் விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகமாக உள்ளது. அதி வேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஓவர் டேக்கிங் போன்றவற்றால் விபத்துக்கள் நடக்கின்றன. விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில், எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இது தவிர லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறை மீறல்களுக்கு அபராத விதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாகர்கோவில் மாநகரில் டிராபிக் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில், போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். ஹெல்மெட் மட்டுமின்றி குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அளவுக்கு அதிகமாக மாணவ, மாணவிகளை ஆட்டோக்கள், வேன்களில் ஏற்றி செல்லுதல் உள்ளிட்டவற்றுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறார்கள் பைக் ஓட்டுவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், கடந்த இரு நாட்களில் பைக் ஓட்டி வந்த சிறார்கள் 10 பேருக்கு தலா ரூ.5000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, சிறார்கள் பைக் ஓட்ட அனுமதித்த வாகனத்தின் உரிமையாளருக்கும் தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது. பெரும்பாலும் பைக் உரிமையாளர் சிறார்களின் தந்தையாகவே உள்ளனர். அவர்கள் தான் காவல் நிலையம் வந்து அபராதத்தை கட்டி விட்டு செல்கிறார்கள். அபராதம் செலுத்தி விட்டு செல்பவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் போலீசாரின் அறிவுரையை சிறார்கள் மட்டுமின்றி, சிறார்களின் தந்தைகள் கூட பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.

நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஒரே பைக்கில் 3 சிறார்கள் வந்தனர். போலீசார் அவர்களை மறித்து சோதனை நடத்தி பைக் ஓட்டி வந்த சிறுவனுக்கு ரூ.5 ஆயிரமும், அவனது தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். ரூ.10 ஆயிரத்துக்கான அபராத ரசீதை கொடுத்து விட்டு பைக்கை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்தனர். பைக் காவல் நிலையம் கொண்டு வருவதற்குள் சிறுவனின் தந்தை, போலீசாரை தொடர்பு கொண்டு ரூ.10 ஆயிரம் அபராதத்தை கட்டி விட்டு, பைக்கை வாங்க தயார் நிலையில் இருந்தார்.

அவரிடம் லைசென்சு இல்லாமல் பைக் ஓட்ட அனுமதிக்காதீர்கள். 18 வயது நிரம்பிய பின் தான் லைசென்சு எடுக்க முடியும். அதன் பிறகே பைக் ஓட்ட கொடுங்கள் என போலீசார் கூறினர். ஆனால் அவர் அதை பெரிதாக நினைக்க வில்லை. எனது மகன் பார்த்து தான் ஓட்டுவான் சார். இப்போது தான் மாட்டிக் கொண்டான் என கூறி, ரூ.10 ஆயிரத்தை சர்வ சாதாரணமாக கட்டி விட்டு, பைக்கை வாங்கி சென்றார். இது குறித்து போலீசார் கூறுகையில், காவல்துறை நினைத்தால் மட்டும் விபத்துக்களை தடுக்க முடியாது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியிலும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். சிறார்கள் பைக், கார் ஓட்ட கூடாது. அவர்களின் பெற்றோர் இதை அனுமதிக்க கூடாது. ஆனால் சில பெற்றோர், இதை மீறுகிறார்கள். எனவே தான் பெற்றோருக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது என்றனர்.

The post நாகர்கோவிலில் 2 நாளில் 10 பேர் சிக்கினர்; சிறார்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கும் அபராதம்: போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nagarkovil ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம்