×

நெல்லை மண்டலத்தில் காற்றாலை மின் உற்பத்தி 5 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது: வினாடிக்கு 15 மீட்டருக்கும் அதிகமாக வீசுகிறது

நெல்லை,: நெல்லை, குமரி மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், காற்றாலை மின் உற்பத்தி கூடி வருகிறது. இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் கடைகோடி மாவட்டங்களான நெல்லை, குமரி மாவட்டங்களில் காற்றாலைகளால் கிடைக்கும் மின் உற்பத்தி எப்போதும் அதிகம். அதிலும் இவ்விரு மாவட்டங்களில் எல்கை பகுதியில் காணப்படும் முப்பந்தல், பணகுடி, ராதாபுரம், ஆரல்வாய்மொழி பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி காற்று காலங்களில் அதிகம் காணப்படும். தென்மாவட்டங்களில் கடந்த 15 தினங்களாக அதிக காற்று காணப்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் சாரல் காலமாக கருதப்படும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மெல்லிய சாரல் காற்று தென்பட்டாலும், நகர மற்றும் கிராமப்புறங்களில் மண்ணை அள்ளித் தூற்றும் அளவுக்கு காற்று வீசி வருகிறது. வினாடிக்கு 14 மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலே காற்றாலை மின்சாரம் கிடைக்கும் நிலையில், இப்போது வினாடிக்கு 15 மீட்டர் முதல் 19 மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. எனவே காற்றாலை மின்சாரத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் நேற்று காலை நேர நிலவரப்படி, 5 ஆயிரத்து 542 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் கிடைத்தது. குறைந்தபட்ச மின்சாரத்தின் அளவு கூட 3 ஆயிரத்தை தாண்டி காணப்பட்டது. தேனி தொடங்கி கன்னியாகுமரி வரையிலான நெல்லை மண்டலத்தில் கூடுதல் மின்சாரம், ஈரோடு கோட்டத்தில் அதைவிட குறைவான மின் உற்பத்தியும் காற்றாலைகள் மூலம் கிடைத்து வருகின்றன.

நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் உலைகள் மூலம் நேற்று காலை நேர நிலவரப்படி 2014 மெகாவாட் மின்சாரமும், தூத்துக்குடி தெர்மல் அனல்மின்நிலையம் (1,2,5 யூனிட்டுகள்) மூலம் 607 மெகாவாட் மின்சாரமும் கிட்டின. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக காற்றாலை மின்சாரமே அதிகளவு கிட்டி வருவதாக மின்பொறியாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் இருப்பினும், அவற்றில் 70 சதவீதம் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் காணப்படுகின்றன. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் எப்போதும் காற்றாலைகளில் இருந்து அதிகபட்ச மின்சாரம் ஆண்டுதோறும் கிடைத்து வருகிறது. காற்று சீசன் தொடங்கி நடந்து வருவதால், காற்றாலைகள் மூலம் தற்போது 5 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியும் மின்சாரம் கிடைக்கிறது. வரும் நாட்களில் மேலும் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்க கூடும்.’’ என்றனர்.

நெல்லை – குமரி எல்கை பகுதிகளில் காற்று சீசன் காலத்தில் சராசரியாக 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். கடந்த ஏப்ரல் மாதம் கோடைகாலத்தில் காற்றாலை மின் உற்பத்தி 300 மெகாவாட்டுக்கும் கீழ் குறைந்து பரிதாப நிலையை எட்டியது. இந்நிலையில் காற்றுகாலமான தற்போது காற்றாலை மின்சாரம் 5 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி அதிகரித்திருப்பது மின்நுகர்வுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.

The post நெல்லை மண்டலத்தில் காற்றாலை மின் உற்பத்தி 5 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது: வினாடிக்கு 15 மீட்டருக்கும் அதிகமாக வீசுகிறது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Kumari ,India's… ,Nellie ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...