×

கீழடி அருங்காட்சியகம் இனி இரவு 7 வரை திறந்திருக்கும் : வார விடுமுறையும் செவ்வாய்க்கு மாறியது

திருப்புவனம் : கீழடி அருங்காட்சியகத்தின் வார விடுமுறை வெள்ளிக்கிழமையில் இருந்து செவ்வாய்க்கிழமையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் தினந்தோறும் இரவு 7 மணி வரை அருங்காட்சியகம் திறந்திருக்கும் என்றும் தொல்லியல் துறை அறிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டுள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வாரம் முதல் வார விடுமுறை வெள்ளிக்கிழமையில் இருந்து செவ்வாய்க்கிழமையாக மாற்றப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கான நேரம் காலை 10 மணி முதல் 6 மணி என இருந்து வந்ததை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அருங்காட்சியகம் திறந்திருக்கும் என்பதால் திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் அருங்காட்சியகத்தை காண குவிந்தனர்.

மாணவர்களும், ஆசிரியர்களுமாக அருங்காட்சியகத்தில் கூட்டம் களைகட்டியது. கீழடி அருங்காட்சியகத்தில் தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றினை அறிந்து கொள்ளும் வகையில் 15 நிமிட ஒளி – ஒலி காட்சிக்கூடம், கீழடியும் வைகையும், நீரும் நிலமும், கலம் செய்கோ, நெசவுத்தொழில் மற்றும் அணிகலன்கள், கடல்வழி வாணிபம், வாழ்வும் வளமும் என ஆறு காட்சிக்கூடங்களில் மொத்தம் 13 ஆயிரத்து 608 தொல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தளங்களிலும் மெகா சைஸ் எல்இடி டிவிக்கள் பொருத்தப்பட்டு காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதுதவிர மினியேச்சர் சிற்பம், புடைப்பு சிற்பம், மெய்நிகர் காட்சிகள், மினி ஏசி தியேட்டர் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா ஆர்வலர்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் கண்டு வியக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கீழடி அருங்காட்சியகம் இனி இரவு 7 வரை திறந்திருக்கும் : வார விடுமுறையும் செவ்வாய்க்கு மாறியது appeared first on Dinakaran.

Tags : Keezadi ,Museum ,Tirupuvanam ,Geezadi Museum ,
× RELATED சுற்றுலா பயணிகளை ஈர்க்க கடலுக்கு...