×

ஜப்பானுடன் டிராவால் ரசிகர்கள் ஏமாற்றம்; அடுத்த 3 போட்டியும் முக்கியமானது: இந்திய அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் பேட்டி

சென்னை: 7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. 2வது நாளான நேற்று 3 போட்டிகள் நடந்தன. தென்கொரியா-பாகிஸ்தான் மோதிய போட்டி 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் மலேசியா 5-1 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடி 2வது வெற்றியை பெற்றது.

இரவு 8.30 மணிக்கு இந்தியா-ஜப்பான் அணிகள் மோதின. தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள இந்தியா, 19வது இடத்தில் உள்ள ஜப்பானை எளிதாக வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆட்டத்தில் 28வது நிமிடத்தில ஜப்பான் நாகயோஷி கென் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடியாக 43வது நிமிடத்தில் இந்தியா கேப்டன் ஹர்மன்பிரீத்சிங் கோல் அடித்து சமனிலை ஏற்படுத்தினார். பின்னர் ஆட்டத்தின் இறுதிவரை கோல் எதுவும் அடிக்கபடவில்லை. இதனால் 1-1 என சமனில் முடிந்தது. 61 சதவீத நேரம் பந்து இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. கோல் நோக்கி 21 ஷாட்கள் அடிக்கப்பட்டன. கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை ஜப்பானின் எல்லைக்குள் இந்தியா பந்தை கொண்டு சென்ற வண்ணம் இருந்தது.

ஆனால் ஜப்பானின் சிறப்பான தடுப்பாட்டத்தால் கோல் அடிக்க முடியவில்லை. இதனிடையே நேற்று போட்டி முடிந்த பின்னர் இந்திய அணியின்கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் கூறுகையில், ஜப்பானுடன் சமன் செய்தது ஏமாற்றமாக இருந்தது. இருப்பினும் அடுத்த போட்டிகளில் வெற்றி பெறுவோம். ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது தான், என்றார். இன்று ஓய்வு நாளாகும். நாளை மாலை 4 மணிக்கு சீனா -தென்கொரியா, மாலை 6.15 மணிக்கு பாகிஸ்தான்-ஜப்பான், இரவு 8.30 மணிக்கு மலேசியா-இந்தியா மோத உள்ளன.

The post ஜப்பானுடன் டிராவால் ரசிகர்கள் ஏமாற்றம்; அடுத்த 3 போட்டியும் முக்கியமானது: இந்திய அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Japan ,Team India ,Sreejesh Petty ,Chennai ,7th Asian Champions Trophy hockey series ,Mayor Radhakrishnan Stadium ,Egmore, Chennai.… ,Sreejesh ,Dinakaran ,
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...