×

முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கு அதிகாரிகளுக்கான அரசாணை வெளியீடு

சென்னை: முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கு அதிகாரிகளுக்கான பணிகளும், பொறுப்புகளும் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை: 2023-24ம் ஆண்டிற்கான அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையால் ஆணை வெளியிடப்பட்டது. அதன்படி, துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சத்துணவு திட்டம் மட்டுமே பணிகளும் பொறுப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு திட்டம் ஆகியோருக்கு பணிகளும் பொறுப்புகளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. முதல்வரின் காலை உணவு திட்டத்தை தினசரி கண்காணிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் சத்துணவு திட்டம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி ஆகியோருக்கு ஏற்கனவே உள்ள பணிப் பொறுப்புகளுடன் சேர்ந்து கூடுதலாக முதல்வரின் காலை உணவு திட்டத்தை கண்காணிக்கும் பணிகளும் சேர்க்கப்படுகின்றன.

அந்தவகையில் தினசரி காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்தல். உணவு வழங்கப்படும் நேரமாக காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் மாணவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தல், உணவு தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் இருப்பு வைத்துக்கொள்ளுதலை கண்காணித்தல், தணிக்கை, பணியாளர்களுக்கு இடையே உரிய ஒருங்கிணைப்பை கண்காணித்தல், கண்காணிப்பு குழு கூட்டங்கள் என அனைத்தையும் கண்காணித்து முறையாக திட்டம் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கு அதிகாரிகளுக்கான அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government of Tamil Nadu ,Chief Minister ,
× RELATED பூதலூர் வட்டம் புதுக்குடியில் ரூ.50 கோடியில் கால்நடை தீவன தொழிற்சாலை