×

வியாபாரிகள் வேறு துறைமுகங்களுக்கு சென்றதால் சின்னமுட்டத்தில் மீன்கள் விலை சரிவு

கன்னியாகுமரி, ஆக.5 : மேற்கு கடற்கரையில் தடை காலம் நீங்கியதன் எதிரொலியாக கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் மீன்களின் விலை குறைந்துள்ளது.
குமரி கிழக்கு கடற்கரைக்கு உட்பட்ட கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. தினமும் காலை 5 மணிக்கு விசைப்படகில் செல்லும் மீனவர்கள் இரவு 9 மணிக்கு திரும்புவார்கள். இதில் கிடைக்கும் மீன்களை சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக ஏலக்கூடத்தில் வைத்து விற்பனை செய்வார்கள். கடந்த மாதத்தில் குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடித் தடைகாலம் நடைமுறையில் இருந்ததால் குளச்சல் உள்ளிட்ட பகுதி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் கேரளா உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் சின்னமுட்டம் துறைமுகம் பகுதியில் மீன்களை ஏலம் எடுக்க போட்டா போட்டி போட்டனர். இதனால் சின்னமுட்டம் வரும் மீன்களுக்கு கடும் கிராக்கி இருந்தது. மீன்கள் விலையும் கணிசமாக உயர்ந்தது. இந்நிலையில் குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகளுக்கு விதிக்கப்பட்ட 60 நாள் மீன் பிடி தடை காலம் கடந்த ஜூலை 31ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றன.

ஆழ்கடல் பகுதியில் உயர் ரக மீன்களை அள்ளிக்கொண்டு கரை திரும்பின. இதனால் பல வியாபாரிகள் மீன்களை ஏலம் எடுப்பதற்காக அந்த பகுதிகளுக்கு சென்று விட்டனர். எனவே இதுவரை சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்ந்திருந்த நிலையில், தற்போது குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்வரத்து அதிகரித்ததால் சின்னமுட்டத்தில் மீன்களின் விலை கணிசமாக குறைந்து விட்டது. ஏலம் எடுக்கவும் வியாபாரிகள் அதிகளவில் வருவதில்லை என மீனவர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

The post வியாபாரிகள் வேறு துறைமுகங்களுக்கு சென்றதால் சின்னமுட்டத்தில் மீன்கள் விலை சரிவு appeared first on Dinakaran.

Tags : Chinnamuttam ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?